September 25, 2021

மலேசியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வழி கோலிய ஜி.எஸ்.டி. ரத்து!

கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை சுமார் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்து அனுபவப்பட்ட மலேசியாவின் தற்போதைய பிரதமராகி உள்ள மகதீர், ‘ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு பழைய விற்பனை மற்றும் சேவை வரி முறை விரைவில் கொண்டு வரப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி என்னும் பொருள் சேவை வரியை இந்திய அரசு அறிமுகம் செய்து அது தொடர்பான சர்ச்சை விவாதங்கள் இன்னும் நடந்து வரும் நிலையில் மலேசியாவில் ஜி.எஸ்.டி -யால்தான் ஆட்சி மாற்றமே நடந்துள்ள தாக தெரிய வந்துள்ளது. ஆம் மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அரசு எதனையும் கண்டு கொள்ளாமல் செயல்படுத்தி வந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வோம்” என்று அறிவித்தது. அதன்படி அந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அதிலும் மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜிப் ரசாக்கின் தலைமையிலான பரிசியான் நேஷனல் கட்சியின் ஆட்சியை மகதீர் தலைமையிலான நான்கு கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் முன்னணி பெருவாரியான இடங்களில் (115) வெற்றி பெற்று படுதோல்வி அடைய வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகள ஆட்சி செய்த நஜிப் ரசாக்கின் இந்தத் தோல்விக்குப் பின்னணியாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது, நஜிப்பின் ஆட்சியில் மெகா ஊழல்கள் நடந்தன. நாடு முழுவதும் மதவாதக் குழுக்கள் பெருகின. அதற்கான ஆதரவையும் முன்னர் நடைபெற்ற ஆட்சி அளித்தது. ரியல் எஸ்டேட் தொடங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனப் பல துறைகளிலும் கோடிக்கணக்கான டாலர்கள் சுருட்டப்பட்டு ஊழல்கள் நடைபெற்றன. இதேபோல் அரசு கஜானாவில் இருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு அவர் மாற்றியதாக புகார் கிளம்பியது.

எனினும், மலேசியாவில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதே நஜிப்பின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டியை கொண்டுவந்தது தனது தவறான முடிவு என்று நஜிப்பே இறுதியில் ஒப்புக்கொண்டார். 2015 ஏப்ரல் 1ஆம் தேதி அந்நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்துக்குமே 6 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை அனுபவித்தனர்.இந்த நிலையில்தான் மலேசியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகதீர் முகமது, கடந்த மே 10ஆம் தேதி செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது, ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு பழைய விற்பனை மற்றும் சேவை வரி முறையே (SST) கொண்டு வரப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு மலேசிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்து.