March 26, 2023

மனதை மயக்கும் குரலிசையோன் ,மலேசியா வாசுதேவன்’

மலேசியா வாசுதேவன், என்ற பெயரை சொன்னதுமே இவரின் பாடல்கள் சில பல நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரரிவர். பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காயம் ஆறாமல் உடல்நிலை மோசமான தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையாக சிகிச்சை அளித்தும் அவர் இதே பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு உயிரிழந்தார்.

வாசுதேவனின் பெற்றோருக்கு பாலக்காடு தான் சொந்த ஊர். மலேசியாவுக்கு ரப்பர் தொழிற்சாலை களில் பணிபுரியும் நிமித்தம் இடம் பெயர்ந்தார்கள். பெற்றோருக்கு எட்டு குழந்தைகள். இவர்தான் கடைசி. ரப்பர் தோட்டங்களில் பணி அலுப்பு தெரியாமல் இருக்க அனைவருமே உரத்தக் குரலில் பாடுவார்களாம். வாசுதேவனின் குடும்பத்தில் அத்தனை பேருக்குமே நல்ல குரல்வளம். அப்பா, அண்ணன் இருவர்தான் தன்னுடைய இசை குரு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். எட்டு வயதிலேயே மேடையேறி பாடத் தொடங்கினார். மலேசியாவில் இசை மற்றும் நாடகம் தொடர் பான குழுக்களோடு அவருக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. அவர் நடித்த நாடகம் ஒன்றை சினிமா வாக்கும் முயற்சியிலேயே தமிழகத்துக்கு வந்ததாக சொல்வார்கள். கன்னட சினிமாக்களில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் (இளையராஜா இவரிடம்தான் பணிபுரிந்தார்) ஒரு படத்தில் இவரது குரலை பயன்படுத்திக் கொண்டதாக தகவல்.

தமிழில் இசையமைப்பாளர் வி.குமாரின் இசையில் ஜெய்சங்கர் நடித்த ‘டெல்லி டூ மெட்ராஸ்’ படத்தில், ‘பாலு விக்கிற பத்மா, உன் பாலு ரொம்ப சுத்தமா?’ என்கிற பெப்பியான பாடலை பாடி அறிமுகமானார். பின்னர் இளையராஜா சகோதரர்களின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார். ‘பாரத விலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் நாடு’ பாடலில் வரும் பஞ்சாபிக் குரலில் இவரை பாடவைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘குமாஸ்தாவின் மகள்’ படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘காலம் செய்யும் விளையாட்டு’ பாட்டுதான் வாசுதேவனுக்கு முதல் ஹிட்டு. இந்தப் படத்தில் இருந்துதான் டைட்டிலில் இவர் பெயர் ‘மலேசியா வாசுதேவன் என்று இடம்பெற ஆரம்பித்தது.

இளையராஜாவின் நண்பர் என்பதால் அவரது இசையமைப்பில் தொடர்ச்சியாக பாட ஆரம்பித்தார். ‘16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’, இவரது குரலில் சூப்பர்ஹிட்டாக அமைய தமிழின் முன்னணிப் பாடர்களின் வரிசையில் இடம்பெற்றார். எழுபதுகளின் இறுதியிலும், எண்பது களின் தொடக்கத்திலும் அடுத்த சூப்பர்ஸ்டாராக வளர்ந்து வந்த ரஜினிகாந்துக்கு இவரது குரல் மிகவும் பொருத்தமாக அமைந்தது.சுமார் எண்பத்தைந்து படங்களில் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்தார். நான்கைந்து திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். கடைசியாக விஷ்ணு விஷால் நடித்த ‘பலே பாண்டியா’ (2010) படத்துக்கு பாடியிருந்தார். கடைசிக் காலத்தில் திரையுலகம் அவரை கைவிட்டுவிட்டதாகவே கருதி துயரத்தில் வாழ்ந்தார். 2011ல் இதே நாளில் மறைந்தார்.