October 4, 2022

வைகை எக்ஸ்பிரஸ் – திரைப்பட விமர்சனம்!

மக்கள் தளபதி என்ற அடைமொழி போட்டுக் கொள்ளும் ஆர் கே நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான வைகை எக்ஸ்பிரஸ், இன்று 200-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது. மக்கள் பாசறை தயாரிப்பில், ஆர்கே – நீத்து சந்திரா, இனியா, ஆர்.கே.செல்வமணி, கோமல் சர்மா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கி|றது இந்த வைகை எக்ஸ்பிரஸ்.

vaigai express mar 24

கதை:

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஏ.சி.கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கும் எம்.பி சுமனின் மச்சினிச்சி, ஒரு டிவி நிருபர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை (நீது சந்திரா) என மூன்று பேர் மதுரை செல்வதற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இதில் மற்ற இருவரும் ஸ்பாட்டிலேயே உயிரிழக்க, நீது சந்திரா மட்டும் கோமா நிலையில் இப்பவோ அப்பவோ என இறக்கும் தருவாயில் இருக்கிறார்.

இந்த வழக்கை ரயில்வே போலீஸ் அதிகாரி ஆர்.கேவிடம் ஒப்படைக்கிறார் எம்.பி சுமன். அதே பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதி ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கும் ஆர்.கேவுக்கு இந்த கொலையை அவர் செய்யவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.. அந்த கூபேயில் உடன் பயணித்த பலரும் அவரது சந்தேக வட்டத்துக்குள் வருகின்றனர்.

விசாரணையை வெவ்வேறு கோணத்தில் முடுக்கிவிடும் ஆர்.கேவுக்கு இந்த கொலைகளுக்கான பின்னணியும் அதன் பின்னணியில் இன்னும் சிலர் இருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவருகிறது.. குறிப்பாக நீது சந்திராவின் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணமும் திகைக்க வைக்கிறது.. இறுதியில் குற்றவாளி யார், அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது எதிர்பாராத க்ளைமாக்ஸ்..

திரையில் தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் எல்லாம் அவன் செயல்,என் வழி தனி வழி படங்களில் பரிணமளித்த ஆர்.கே இதிலும் தனக்கு பொருத்தமான துப்பறியும் போலீஸ் அதிகாரி கேரக்டரை தேர்ந்தெடுத்து ஸ்கோர் செய்துள்ளார். ஷாஜி கைலாஷ் திரைக்கதைப்படி புதிய கோணங்களில் ஆராய்வதும் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதும் எதிரிகளை வெளுத்து எடுப்பதுமாக நிறைவாக தன் பணியை செய்துள்ளார்

நீது சந்திரா முதல் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு கேர்கடரையும் தனது வித்தியாசமான நடிப்பால் வேறுபடுத்தி காட்டியுள்ளார். மேலும் ஆர்..கேவுடன் படம் நெடுக போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் கலகலப்பூட்டுகிறார்.. படம் முழுவதும் மற்ற நடிகர்களின் பங்களிப்பு சம அளவில் இருப்பது படத்துக்கு ப்ளஸ்.. டிடி.ஆர் எம்.எஸ்.பாஸ்கர், ரயில்வே போலீஸ் ஜான்விஜய், நடிகையாக வரும் இனியா, டிவி நிருபராக வரும் கோமல் சர்மா, அட்டெண்டராக நடித்துள்ள மலையாள நடிகர் அனூப் சந்திரன், சங்கீத சிகாமணியாக நடித்துள்ள சித்திக், சுமன், ரமேஷ் கண்ணா, டாக்டர்களாக சுஜா வருணீ, பவன், ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக மனோபாலா, சிங்கமுத்து என அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்காக இயக்குனர் ஷாஜி கைலாஷையும் நாயகன் ஆர்.கேவையும் தாராளமாக பாராட்டும் நோக்கில் தாராளமாக ஒரு தடவை தியேட்டருக்கு போய் ட்ராவல் செய்து விட்டு திருப்தியோடு திரும்பலாம்.