December 1, 2021

இலங்கை இன்றைய நிலவரம் – ச்சிச்சீ.. சிறிசேனா புளிப்பு – அணி விலகினார் ராஜபக்சே!

கடந்த இரண்டு வார்மாக கன்னாபின்னாவென்று அரசியல் சூறாவளி வீசிக் கொண்டிருக்கும் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். இதனால் சிறிசேனாவுக்கான பலம் மிகக் குறைந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

கடந்த அக்டோபர் கடைசி வாரம் இலங்கையின் அதிபர் சிறிசேனா திடீரென ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ஆனாலும் ராஜபக்சேவை நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடன் உடனடியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளு மன்றத்தை கலைத்தார் சிறிசேனா. இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது பிரதமர் பதவிக்காக ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே. இவருடன் இவரது மகன் நமல் ராஜபக்சேவும் கட்சியில் இருந்து விலகி உள்ளார். ராஜபக்சேவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இவர்களில் சிலர் சிறிசேனாவிற்கு நெருக்கமான தலைவர்கள் ஆவர். இவர்கள் எல்லோரும் சிறிது நேரம் முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இவர்கள் எல்லோரும் இலங்கை பொதுஜன முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சியில் இணைந்தனர்.

முன்னதாக இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் (அதிபர் தேர்தலுக்கு பின்) இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இருந்தார் ராஜபக்சே. தற்போது மீண்டும் அதே கட்சிக்கு ராஜபக்சே சென்றுள்ளார். இந்த கட்சித்தான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஜனவரியில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக இவர்கள் கட்சி மாறியுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடியும் என்று நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இவர்கள் சிறிசேனவின் கட்சியுடனே கூட்டணி வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் 50 முன்னாள் எம்.பி.க்கள் சிறிசேனவை விட்டு சென்று இருப்பது அவருக்கு பின்னடைவாகத்தான் இருக்குமாம்.