July 31, 2021

மதுபான பாட்டிலில் மகாத்மா படம்: பகிரங்க மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்

மனித உடலையும் அழித்து உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடியவர் அண்ணல் காந்தியடிகள். மதியை மயக்குகிற மதுவை எதிர்த்து கடுமையாக போராடினார் காந்தி. “மதுவிலக்கு என்பதை மனதளவிலும் ஏற்றுக்கொண்டு உண்மையாக, மக்களுக்கு செய்யும் நன்மையாக அதை செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை. பலவந்தப்படுத்தி ஒரு மனிதனை பரிசுத்தமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் நஷ்ட ஈடு கொடுக்காமல் அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்” என்று முழங்கினார். அப்பேர்பட்ட மகாத்மா காந்தி புகைப்படத்தை தங்களது மதுபான பாட்டில்களில் பயன்படுத்தியதற்காக இஸ்ரேல் மதுபான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள எகியம் (yehiam) பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் மால்கா ப்ரீவரீஸ். மதுபானங்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான இது கடந்த மாதம் நடந்த இஸ்ரேல் நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் 5 வரலாற்று நாயகர்களை தங்களது மது பாட்டில்களில் இடம்பெறச்செய்தது. அதில் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விவரம் மாநிலங்களவையில் விவாதத்தின் போது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கவனத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொண்டு வந்தார். மேலும், உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதுபாட்டில்களில் இருந்து காந்தி புகைப்படத்தை நீக்குமாறு இந்திய அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து, மால்கா ப்ரீவரீஸ் நிறுவனம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

மால்கா ப்ரீவரீஸ் நிறுவனத்தின், ப்ராண்ட் மேலாளரான ஜிலாட் டிரார் “காந்தி புகைப்படத்தை பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய மக்களிடமும் இந்திய அரசிடமும், மனப்பூர்வமான மன்னிப்பை மால்கா பீர்ஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். எங்கள் மதுபாட்டில்களில் காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதோடு, நாங்கள் அந்த மதுபாட்டிலின் உற்பத்தியையும், விநியோகத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டோம் என்றும், ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பப்பட்ட மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாகவே, அவரது புகைப்படத்தை எங்களது மதுபாட்டில்களில் பயன்படுத்தினோம், எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்திய 5 தலைவர்களில் காந்தி மட்டுமே இஸ்ரேலை சாராதவர். டேவிட் பென் குரியன், கோல்டா மேர், மெனாச்செம் பெகின் ஆகியோர் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் ஆவர். எனினும் இந்திய அரசின் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மதுபாட்டில் தயாரிப்பை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

71வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக ஐந்து முக்கியத்தலைவர்களை தங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்தி கவுரவிக்க எண்ணினோம். அதைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.