August 15, 2022

காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையின் சாராம்சம்!

சுமார் 85 ஆண்டுகளுக்குமுன்னால் (1934) காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். கிராமங்களுக்குப் பணிபுரியச்செல்கிற தொண்டர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று மிக விரிவாக விளக்கி இருக்கிறார். சேவை மனப்பான்மை என்பதற்கான ஓர் அரிச்சுவடியைப்போல் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது. ஒருவேளை, நமக்குச் சேவையில் ஆர்வம் இல்லாவிட்டாலும், பல நல்ல தனிமனித ஒழுக்கப் பண்புகளை இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்:

கிராமங்களுக்குப் பணிபுரியச்செல்கிற தொண்டர்கள் உழைத்துப் பிழைக்கவேண்டும். தூங்குகிற, ஓய்வெடுக்கிற எட்டுமணிநேரத்தைத்தவிர மீதமுள்ள நேரமெல்லாம் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஒரு விநாடியைக்கூட வீணாக்கக்கூடாது; மற்றவர்களையும் சோம்பேறித் தனத்துக்கு அடிமையாக அனுமதிக்கக்கூடாது. தொடர்ந்த உழைப்பு என்பது எந்த அளவு மகிழ்ச்சியைத் தருகிற விஷயம் என்பதை மற்றவர்கள் அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உடலுழைப்பு அவருடைய உடலை உறுதியாக்கும். அறிவுழைப்பு அவருடைய மனத்தைப் பண்படுத்தும்.

அவர் எல்லாருடனும் பணியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆனால், நான் மூளையால்மட்டுமே உழைப்பேன், உடலுழைப்பை மற்றவர்களுக்கு ஒதுக்கிவிடுவேன் என்று சொல்லக்கூடாது. அது முறையான பகிர்தல் ஆகாது. எல்லாரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும்.

நாம் கட்டாயமாக விரும்பிப் பின்பற்றுகின்ற ‘சும்மாயிருக்கும்’ பழக்கத்தை விடவேண்டும். இந்தப் பழக்கம் நம்மிடம் இருக்கும்வரை எந்த முயற்சியும் நமக்குப் பலன் தராது, நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்காது.

கிராமத்திற்குச் செல்லும் தொண்டர்கள் அங்குள்ள பணிகளை நன்கு கற்றுக்கொள்ளவேண்டும்; அவற்றை இன்னும் மேம்படுத்துவது எப்படி என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தால், அந்தப் பணிகள் அவருக்கு நடுக்கத்தை உண்டாக்காது, மகிழ்ச்சியைத் தரும். இதை இன்னும் இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவர் உணர்வார்.

அவர் கிராமத்துக்கு ஆசிரியராகச் செல்லலாம்; ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு மாணவராகவும் இருக்கவேண்டும். கிராம வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும்; கிராமத்துக் கைவினைப்பொருள்களைச் செய்வது எப்படி, அந்தக் கலையை வளர்த்து முன்னேற்று வது எப்படி என்றெல்லாம் சிந்தித்துக் கண்டறியவேண்டும்.

கிராமங்களில் தூய்மையைப் பரப்புவதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். அவருடைய வீடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தூய்மைக்கு அடையாளமாக இருக்கவேண்டும். அத்துடன் அவர் நின்றுவிடக்கூடாது, எங்குசென்றாலும் விளக்குமாறு, கூடையைக் கொண்டு செல்ல வேண்டும், தூய்மையின் செய்தியைப் பரப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.

கிராமத்தில் மருத்துவமனையோ மருந்தகமோ வைக்கும் முயற்சி வேண்டாம். அது மருத்துவர் களுடைய வேலை. அதற்குப்பதிலாக, நோயைத் தடுப்பதற்கான வழிகளை, அதாவது, தூய்மையைப் பராமரிக்கும் வழிகளை அவர்களுக்குச் சொல்லித்தரலாம்.

தொண்டர்கள் மாளிகையைப்போன்ற கட்டடங்களில் வாழக்கூடாது. அவற்றைப் பொதுப்பணி களுக்குத் தந்துவிட்டு எளிய குடிசைகளில் வாழவேண்டும்.

ஒரு தொண்டருடைய வீடு எப்போதும் ஹரிஜனங்களுக்காகத் திறந்திருக்கவேண்டும். தங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் இவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என்று அவர்கள் இயல்பாக நினைக்கும்படி அவர் நடந்துகொள்ளவேண்டும்.

ஒருவேளை, தொண்டருடைய வீட்டுக்கு ஹரிஜனங்கள் வருகிறார்கள் என்பதால் மற்ற சாதி களைச் சேர்ந்தவர்கள் சினம் கொள்ளலாம். அந்தச் சூழ்நிலையில் அவர் கலங்கவேண்டியதில்லை, ஹரிஜனங்களுக்குமத்தியில் குடியேறிவிடலாம்.

தொண்டருடைய வாழ்க்கை கிராமத்து வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கவேண்டும். தன்னைப் பெரிய படிப்பாளியாக, இலக்கியவாதியாக, புத்தகப்புழுவாகக் காட்டிக்கொள்ளக்கூடாது, ‘வாழ்க்கையின் அற்ப விஷயங்களில் எனக்கு ஆர்வமில்லை’ என்பதுபோல் நடந்துகொள்ளக்கூடாது.

மாறாக, அவர் எப்போதும் உழைப்பாளியாகத் தோன்றவேண்டும். மக்கள் தங்களிடம் எதைப் பேசினாலும், அது மிகச் சாதாரணமான விஷயமாகவே இருந்தாலும் அன்பாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும், பதில் சொல்லவேண்டும்.

சில நேரங்களில், கிராமவாசிகள் அந்தத் தொண்டருக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து நன்கு கவனித்துக்கொள்ள முன்வரலாம். அவர் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. ‘நான் உழைத்து தான் சாப்பிடுவேன்’ என்று வலியுறுத்தவேண்டும். எப்போதும் தான் பெறுவதைவிட அதிகமாகத் தரவேண்டும்.

வேறு சில இடங்களில், மக்கள் அவரை ஏற்க மறுக்கலாம்; கண்டுகொள்ளாமலிருக்கலாம்; அங்கும் அவர் தொடர்ந்து முனைப்போடு பாடுபடவேண்டும்.

என்.சொக்கன்