September 25, 2021

மலேசிய பிரதமராகிறார் 92 வயசான தாத்தா மகாதீர் முகமது!

மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 92 வயதான உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மகாதீர் முகமது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து நேற்று அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கு நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாக மலேசிய தேர்தல் கமிஷன் அறிவித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டதில், எதிர்க்கட்சி கூட்டணியான மகாதிர் முகமதுவின் கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் நஜீப் ரசாக் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் மகாதிர் முகம்மது ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியை கைப்பற்றிய மகாதிர் முகம்மது விரைவில் புதிய மலேசிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த அதிரடி திருப்பம் யாருமே எதிர்பாரக்காத ஒன்றாகும். அதாவது கடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே கட்சி ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. மகதீர் முகமதுவும் 1964 முதல் 22 வருட காலம் பிரதமராக ஆட்சி செய்து பின்னர் ஓய்வு பெற்றவர்தான். ஆனால் நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கோபத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு மீண்டும் களம் கண்டார் மகதீர் முகமது. மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.