பள்ளி பாடத்தில் வரதட்சணை பற்றிய சர்ச்சை : தேசிய மகளிர் ஆணையம் காட்டம்!

பள்ளி பாடத்தில் வரதட்சணை பற்றிய சர்ச்சை : தேசிய மகளிர் ஆணையம் காட்டம்!

வரதட்சணைக்குக் காரணம் பெண்களின் அழகின்மையே என மகாராஷ்டிரா பாடப் புத்தகத்தில் காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இப்பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் தேசிய மகளிர் ஆணையம் போர்க்கொடி தூக்கியுள்ளது..

lesson feb 4

பெண்கள் அழகின்மை மற்றும் உடல் குறைபாடுடன் இருப்பதுவே மணமகன் வீட்டார் வரதட்சணை வாங்க காரணம் என்று மகராஷ்டிரா பாடப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.வரதட்சணை ஒழிப்பது தொடர்பாக சமூகத்தில் குரல்கள் ஓங்கிவரும் நிலையில், பள்ளி பாடப் புத்தகத்தில் வரதட்சணை வாங்கப்பட இத்தகைய காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் முரணாக பார்க்கப்படுகிறது.மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள பள்ளிகளில், பன்னிரெண்டாம் வகுப்பு சமூகவியல் பாடப் பிரிவில், “இந்தியாவில் உள்ள சமூகப் பிரச்சினைகள்” என்ற தலைப்பின் கீழ் வரதட்சணை வாங்குவதற்கு பெண்களின் அழகின்மை மற்றும் உடல் குறைபாடு காரணம் என கூறப்பட்டுள்ளது.

வரதட்சணை வாங்குவதற்குக் காரணமாக பாடப் புத்தகத்தில், “ஒருவேளை மணபெண் அழகற்றவராகவும், உடல் குறைபாடுடனும் இருக்கும்போது அவருக்கு திருமணம் நிகழ்வது கடினம். இம்மாதிரியான பெண்களை மணம் முடிப்பதற்கு, மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கின்றனர்.இந்த கையறு நிலையில் பெண்ணின் வீட்டார் மணமகன் வீட்டார்க்கு வரதட்சணை வழங்குகின்றனர். இதுதான் இந்தியாவில் வரதட்சணை பழக்கத்தில் இருக்கக் காரணம்” என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மகளிர் ஆணைய உறுப்பினர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் அழகற்ற பெண்கள், உடல் சவால் உள்ள பெண்கள் அதிக வரதட்சணை கொடுத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பதும், பெண் வீட்டார் கொடுப்பதும் தவறல்ல என்ற ரீதியில் வர்ணிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்பாடம் கற்பிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பெண்கள் திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று சாடினார்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் வினோத் தவே கூறுகையில், பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட அந்த பாடமும், கருத்தும் கடந்த 3 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளன. தற்போது தான் இது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை. இருப்பினும், நடப்பு ஆண்டில் தேர்வுகள் நெருங்கி விட்ட நிலையில், இனி அப்பாடத்தில் திருத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக அடுத்த கல்வியாண்டில் இது தொடர்பாக மாநில கல்வி வாரியத்தலைவரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts

error: Content is protected !!