December 1, 2022

மகாராஜா எக்ஸ்பிரஸ் டிரெயினில் மேரேஜ் பண்ண ரெடியா? 5.5 கோடிதான் கட்டணம்!

நவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ ரயிலிலிருந்து தொடங்குகிறது. இப்படியாக துவங்கிய பயணத்தில் இன்று இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே காஸ்ட்லி ரயிலாக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.

train oct 13

அந்தக் காலங்களில் மகாராஜாக்கள் திருமணத்துக்கு செல்ல, வேட்டையாட செல்லுதல் போன்றவற்றுக்காக தங்களுக்காக தனியே சொகுசு ரயில் ஒன்றை பயன்படுத்தி வந்தனர். இதன் அடிப்படையிலேயே இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு 7 நட்சத்திர ஹோட்டலில் உள்ள சகல வசதிகளோடும் பயணிகளுக்கு இயங்கி வருகிறது

கட்டணம் :- பெரியவர்கள் : 2.39 லட்சம் முதல் 14.75 லட்சம் (நபர் ஒன்றுக்கு) சிறியவர்கள் : 1.20 லட்சம் முதல் 7.40 லட்சம் (5 முதல் 12 வயதுவரை)

பிரயாணத் திட்டங்கள் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 5 பிராயணத் திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, இந்தியன் ஸ்ப்லென்டர், இந்தியன் பனோரமா, டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரண்மனைகள், கோட்டைகள், உலகப் புராதனச் சின்னங்கள், பாலைவனங்கள், விலங்குகள், ஆன்மிக மையங்கள், மலைகள் என்று இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியப் பெருமைகளையும், இயற்கை வனப்பையும் அணு அணுவாக பயணிகள் ரசித்து மகிழலாம்.

டில்லி – மும்பை, டில்லி – கோல்கட்டா நகரங்களுக்கிடையே இந்த சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 23 கோச்சுகள் கொண்ட இந்த ரயில், சொகுசு இருக்கைகள், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது.

ஒரு கோச் முழுவதும் அதிநவீன வசதி கொண்ட மகாராஜா சூட், நான்கு கேபின்களுடன் ஐந்து டீலக்ஸ் சூட், மூன்று கேபின்களுடன் ஆறு சிறிய சூட்கள், இரண்டு கேபின்களும் இரண்டு சூட்கள் இவற்றில் உள்ளன.

ஒரே நேரத்தில் 42 பேர் உணவருந்தும் வகையில் ரெஸ்டாரென்ட், பார், சினிமா தியேட்டர் என பல வசதிகள் உள்ளன.

இந்த ரயிலில் 88 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த சொகுசு ரயிலில் பயணிக்க நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் உருவானது, சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் என்பது குறிப்பிடத்தக்கது

5.5 கோடி ரூபாய் செலவு செய்ய தயார் என்றால் இந்தியாவில் மிகவும் ஆடம்பரமான சொகுசு ரயிலான மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் நடத்திக் கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது.

இதனிடையே திருமணத்தை வித்தியாசமான முறையில் ஆடம்பரமாக நடத்துவதை சிலர் விரும்புகிறார்கள். விமானத்திலும், நீருக்கு அடியும், கப்பலிலும், மலை உச்சியிலும் ஆடம்பரமாக திருமணம் நடத்துவார்கள். இதேபோல் சில உயர்தரப் பணக்காரர்கள் திருமணத்தை சுற்றுலாவுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருமணம் நடத்திக்கொள்ளும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.

இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ’ மணமகன், மணமகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் திருமணத்தை தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக நினைவு கூறுவதற்காக இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவுள்ளோம்’ என்றார்.

எட்டு நாட்கள் திருமணச் சுற்றுலாவிற்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதையும் முன் பதிவு செய்யலாம். இதற்கு 5.5 கோடி ரூபாய் செலவாகும். மொத்தம் 88 பயணிகள் பயணிக்கலாம். இந்த ஆடம்பர சொகுசு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன.

இவற்றில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியில் சூட் உள்ளிட்டவையும் அடங்கும்.