ஒரு சினிமா என்றால் அதில் பாசம், ஆசை, அன்பு, காதல், குடும்பக்கதை, குரோதம், அரசியல், வன்மம், பழிக்குப் பழி, பிலாசபி, வேதனை, சோகம், பிரிவு, மறைவு போன்றவைகளில் ஏதாவ தொன்றுதானே மையக் கருவாக இருக்கும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் ஒரே படத்தில் மையக் கருவாக வைத்து கொடுத்திருக்கும் படம்தான், ‘மகாமுனி’. அதிலும் ‘மௌனகுரு’ என்ற கோலிவுட் பொக்கிஷத்தின் ஒன்றாகி விட்ட படத்தை வழங்கிய இயக்குநர் சாந்தகுமார் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் எடுத்து கொண்டு இந்த ‘மகாமுனி’ கொடுத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட கதையைச் சொல்ல ஹீரோ ஆர்யாவுக்கு இரண்டு கேரக்டர் கொடுத்து, அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் இப்போதைய சூழலின் குடும்ப பின்னணியில் அமைத்து அதில் இன்றளவும் பலரால் அலசப்படும் பிரச்னை களான ஆங்கில மீடியத்தில் படிக்கும் நிலை, கடவுள் இருக்காரா? இல்லையா? கருவேல மரங்களை அழிக்க வேண்டியதன் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, சாதிப் பாகுபாடு, ஆணவக் கொலை, சித்ர குப்தன் கணக்கு என்றால் என்ன? என்று கேஷூவலாக விளக்கி பரவசப்படுத்தியபடியே செல்கிறார் கள். கூடவே ஒரு அரசியல் தலைவர் கொலையானதையொட்டி நடக்கும் போராட்டத்தின் போது பிரியாணி அண்டாவை தூக்கிச் செல்வது, கம்ப ராமாயணம், பெரிய புராணம் யார் எழுதியது என்பது தெரியாமல் அரசியலில் நீடிக்க என்ன வழி என்று இப்போதைய அரசியலையும் கலந்துக் கட்டி ஒரு முழுமையான விருந்தே படைத்திருக்கிறார்கள்..!

அதாவது தமிழக அரசியலில் முக்கிய களமான காஞ்சிபுரத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு கொலை மாதிரியான சமாச்சாரங் களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் அடியாள் மகா (ஆர்யா 1). இவர் தன் மனைவி மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அடியாள் வேலையை விட்டு விட முயல்கிறான். ஆனால் சந்தப்பவசத்தால் ஒரு கொலை வழக்கில் அவன் மாட்டி விடுகிறான். இதனிடையே இன்னொரு ஆர்யா 2 முனிராஜ் என்ற பெயரில் ஈரோட்டில் சமூகத்தின் அடித்தட்டில் அம்மா (ரோஹினியுடன்) விவேகானந்தரைப் போற்றி, அவர் வழியில் பிரம்ச்சாரியாக வாழ முற்படுகிறான்.அது நடக்குமா? இந்த மினிராஜூடன் இந்த ஈரோட்டில் கொஞ்சம் மேல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் (மஹிமா நம்பியார்) சிநேகிதமாக புன்னகைத்து நெருங்கி பழகுகிறார். இதற்கு சாதி சார்ந்த பார்வையும், துவேஷமும் பூசப்பட்டு ஆர்யா 2 வை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதை அடுத்து நடந்தது என்ன என்பதுதான் கதை.

ஹப்பா.. இந்த ஆர்யாவை நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்.. நான் கடவுள் படத்தை விட அநாயசமாக ஆக்ட் பண்ணி முழு மதிப்பெண்கள் பெறுகிறார். முதுகில் குத்தியிருக்க்கும் கத்தியை எடுக்கும் போதும், பாம்பு விஷம் ஏறுவதை காட்டும் போதும் சிவாஜியை நினைவுப் படுத்துகிறார் இந்த ஆர்யா. அத்துடன் ரெண்டு ரோலுக்குமான பார்வையைக் கூட வேருப் படுத்திக் காட்டுகிறார். இந்துஜா நிம்மதியாக கணவன், மகனோடு வாழ ஆசைப்படும் மனைவி ரோலில் பாந்தமாக பொருந்தி விடுகிறார், மஹிமா சின்ன வீட்டிற்கு பிறந்தவள் என்ற கழிவிரக்க்த்துடன் வசதிமிக்க உயர் ஜாதி பெண் என்ற திமிரைக் காட்டுவதில் ஸ்கோர் செய்கிறார். இளவரசு நடிக்க முயன்று இருக்கிறார்., ஏனையோரும் இயக்குநர் சொன்னதை மீறாமல் செய்திருக்கிறார்கள்.

மாடர்னாகி விட்டாலும் எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில் மனித மனதில் தோன்றும் பல்வேறு விஷயங்களை எளிமையான் வசனங்கள் மூலம் தெளிபட விளக்குகிறார் டைரக்டர். ”சித்ர குபதன் கணக்கு-ன்னா என்ன தெரியுமா? ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாவுற வரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாங்கிறதை வைச்சுதான் அவன் சந்ததி செத்தவங்களோட நல்லது, கெட்டதை தூக்கிச் சுமக்க வேண்டி வரும். அவன் சந்ததி நல்லதை சுமக்கப்போவதா, கெட்டதைச் சுமக்கப்போவதாங்கிறதுதான் அந்தக் கணக்கு” என்றும்” பிண வாடைக்கு மத்தியில் சாப்பிட்டுக் கொண்டே அதற்க்கான விளக்கத்தைக் கொடுப்பதிலும் ‘நாமெல்லாம் மிருகமா இருந்தப்போ உணவும் இனப்பெருக்கமும் மட்டுமே தேவையா இருந்துச்சு. அதுல கொஞ்சம் மிருகங்கள் சிந்திக்க ஆரம்பிச்சது. அப்படிப்பட்ட மிருகங்களுக்கு மனுஷங்கன்னு பின்னால பேர் வெச்சிக்கிட்டாங்க. அந்த மனுஷங்களுக்கு மிருகங்கள்கிட்ட இல்லாத பேராசை, போட்டி, பொறாமை, வஞ்சம்னு நிறைய குணங்கள் சேர்ந்துடுச்சு, மனுஷனோட மனசும் நிம்மதி இழந்துடுச்சு”, என்று பேசும் யதார்த்திற்கும் மெனக்கெட்ட இயக்குநர் கிளைமாக்ஸ் காட்சிகளுக் குதான் கொஞ்சம் கூட யோசிக்காமல் மேம்போக்காக வாய்ஸ் ஓவர் கொடுத்து கோட்டை விட்டு விட்டார்.

ஆனாலும் வணிக ரீதிக்கான கிளாமர்  காட்சிகளை கொஞ்சம் கூட புகுத்தாமல் தான் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் மேலும் கீழும், இடதும் வலமுமாக குறுக்குசால் ஓட்டி தமிழ் சினிமாவின் போக்கை மீண்டும் ஒரு படி உயர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அதே சமயம் இப் படத்தின் கதையைக் கேட்காமல் நடித்த ஆர்யாவுக்கும் இபபடத்துக்கு பூஜை போட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜா உள்ளிட்ட டீம் அத்தனை பேருக்கும் கோலிவுட் கடமைப்பட்டிருக்கும் என்பதென்னவோ நிஜம்!

மார்க் 3.75 / 5