December 8, 2021

நம்ம மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் கெட் டூ கெதர்!

மாமல்லபுரம். வரலாற்றின் அடிப்படையில் அந்த பல்லவர் கால துறைமுக நகரத்திற்கு வழங்கப் பட்ட பெயராகும். மகேந்திர வர்மனின் மகன் நரசிம்மவர்மனுடைய சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன். இவன் சிறந்த போர் வீரன் என்பது மாத்திரம் இல்லாமல் சிறந்த மல்யுத்த வீரனும் கூட. இவன் பல்லவர்களுடைய துறைமுக நகரத்தை மேம்படுத்த சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டதால் அவனை சிறப்பிக்கும் வகையில் அந்த நகரத்திற்கு மாமல்லபுரம் என்று பெயரிட் டிருக்கிறார்கள். இன்று மாமல்லபுரத்தை மகாபலிபுரமாக திரித்து, அதற்கு ஒரு புராண கதையையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

எகிப்து நாட்டில் The Valley of Kings பகுதியில் தோன்றிய குடைவரை கட்டிட அமைப்பின் தாக்கம் மாமல்லபுரத்தில் பிரதிபலிக்கிறது. மாமல்லபுரத்தில் ஏறத்தாழ 150 வருடங்களுக்கான கட்டிட கலையின் பரினாம வளர்ச்சி அடங்கியிருக்கிறது. முதலில் குடைவரையில் தொடங்கி பின்னர் கற்றளி கலையில் முடிவடைகிறது. இந்த வளர்ச்சியின் காலகட்டம் இருநூறு வருடங்கள். மாமல்லபுரத்தில் நாம் பார்க்கும் அத்தனை சிற்பங்களும், கட்டிடங்களும் ஏக காலத்தில் கட்டி முடிக்க பட்டவைகளில்லை. சொல்லப்போனால் மாமல்லபுரத்தில் எந்த கட்டிடமும் முழுமை பெற்றது கிடையாது. மாமல்லபுர கட்டிடங்கள் முழுமை பெறாததற்கு காரணமும் உண்டு. கடற்கரை கோவிலைத் தவிர மாமல்லபுரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் அனைத்து கற்கோவில்களும் பொது மக்களின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டவைகளில்லை. அவைகள் அனைத்தும் வரும் காலத்தில் கட்டபடயிருந்த பெரிய கற்றளி கோவில்களின் மாதரி வடிவங்கள். இதை ஆங்கிலத்தில் Prototype என்கிறார்கள். மாமல்லபுர கற்கோவில்களின் கருவறைக்குள் சிலைகளுக்கு பதிலாக வட்டவடிவமான குழி வெட்டிவைத்ததன் காரணம் இது வழிபாட்டு தளம் அல்ல ஆராய்ச்சி நோக்கம் கொண்டது என்பதை பொது மக்களுக்கு உணர்த்துவதற்காகதான். இப்படியாப்பட்ட
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். சீன அதிபருக்கு மாமல்லபுரத்தை சுற்றி காட்டிய பிரதமர் மோடி அங்குள்ள சிற்பங்கள் குறித்து விளக்கினார். (அடிசினல் ரிப்போர்ட்: மாமல்லபுரத்தை காணவரும் வெளிநாட்டு பயணி களுக்கு அந்த இடத்தின் உண்மையான வரலாற்று மற்றும் கட்டிட சிறப்புகளைப் பற்றி தெரிவிப்போர் எவரும் கிடையாது. இந்திய தொல்லியல் துறை மாமல்லபுரத்தின் உன்னத த்தை எடுத்து சொல்லக் கூடிய எந்திவிதமான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளாமல் ஆரிய கட்டு கதைகள் சுதந்திர மாகவும், ஏகபோகமாகவும் உலா வருவதற்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை அறியாத வெளிநாட்டு பயணிகளும் ஆரிய முகமே இந்திய முகம் என்று நம்பி ஏமாந்து போகிறார் கள். அந்த வகையில் மாமல்லபுரத்தை முன் பின் பார்த்திராத மோடி அரசு அதிகாரிகள் சொல்லிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறாராம்) 

ஆனாலும் கடமைக்காக  கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் வந்தடைந்தார். அதிலும் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை, துண்டு அணிந்து அர்ஜுனன் தபசு பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். சில நிமிடங்களில் அங்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் செய்தியாளர்கள் முன் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.

அதன் பின் அர்ஜூனன் தபசு, கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை, ஐந்து ரதங்கள் ஆகிய பகுதிகளை சீன அதிபருக்கு பிரதமர் மோடி சுற்றி காட்டினார். அங்குள்ள ஒவ்வொரு சிற்பங்களின் சிறப்புகளை பிரதமர் மோடி அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எடுத்துரைத்தார். அதை ஜி ஜின்பிங்கும் கவனமாக கேட்டுக்கொண்டார். ஐந்து ரதம் பகுதியில் இரு தலைவர்களும் சிறிது நேரம் அமர்ந்து பேசினர். அங்கு அவர்களுக்கு குடிக்க இளநீர்கள் ஸ்டிராக்களுடன் தரப்பட்டது.

இரு தலைவர்களும் பல இடங்களில் சிற்பங்கள் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பின் கார்களில் கடற்கரைக் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். மின் விளக்குகளால் ஜொலித்த கடற்கரை கோவிலை பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சுற்றி பார்த்தனர். கடற்கரை கோவிலின் சிறப்புகள் அதன் தொன்மை குறித்து பிரதமர் மோடி அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எடுத்துரைத்தார்.

அதன் பின் அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத மேடைக்கு இரு தலைவர்களும் சென்றனர். அங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட 8 இந்திய பிரமுகர்கள் அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றனர். அதேபோல் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யூ உள்ளிட்ட 8 சீன பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். கடற்கரை கோவிலில் கலாசேஷ்திரா நாட்டியப் பள்ளியை சேர்ந்த கலைஞர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை தலைவர்கள் இருவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதக்களி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் இடம்பெற்றன. ராமாயணத்தின் ஒரு பகுதியும் நாட்டிய நாடகமாக நடத்தி காட்டப்பட்டது.பின் சேதுமாதவராவ் எழுதிய புகழ்பெற்ற தமிழ் பாடலான சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடலுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினர். இறுதியாக மகாத்மா காந்தியடிகளின் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலின் இசையுடன் கலைநிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

கலை நிகழ்ச்சி துவங்கும் முன்பாக பரதநாட்டியம், கதக்களி ஆகிய நாட்டியங்களின் வரலாறு, அதன் சிறப்புகள் மற்றும் கலாசேத்திரா நாட்டியப் பள்ளி குறித்த விரிவுரை தமிழ் மற்றும் சீன மொழியில் எடுத்துரைக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் முடிந்த பின் கலை குழுவினருடன் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  மேலும்  தமிழக பாரம்பரிய அடையாளங்களான நாச்சியார்கோவில் அன்ன விளக்கையும், பலகை படம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் ஓவியத்தையும் பரிசளித்தார். தொடர்ந்து பல நாடுகளிலும் தமிழில் பேசி அசத்திய பிரதமர், தற்போது தமிழ் மரபுப்படி உடையணிந்தும், தமிழர் பண்பாட்டு பொருட்களை பரிசளித்தும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பின்னர் பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரவு விருந்திற்கு கிளம்பி சென்றனர்.

பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்தில் அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சாம்பார் சாதம், தக்காளி ரசம், கவுனி அரசி அல்வா, பிரபலமான காரைக்குடி செட்டிநாடு உணவுகள் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க்து.