February 6, 2023

வட மாநில தொழிலாளிங்க – ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்க!!

என்னுடைய கட்டுமானப் பணிகட்கு என்னிடம் இருபத்து நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றும் தலைக்கொத்தனாரைத்தான் (மேஸ்திரி) நம்பியிருக்கிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை ஏதேனும் கட்டுமானப் பணி வந்துவிடும். என் முதலீடுகள் கட்டடங் களாகத்தான் இருக்கின்றன. அதனால் ஒவ்வொன்றிலும் சிறிதும் பெரிதுமாக மாற்று வேலைகள், மேம்பாட்டுப் பணிகள் இருக்கும். புதிதாக ஒன்றைச் செய்வதும் உண்டு.

இதுநாள்வரை கோபிக்கு அருகிலுள்ள நம்பியூரைச் சேர்ந்தவர்களே செய்து தருவார்கள். தலைக்கொத்தனாரும் அவ்வூரார்தான். வரைபடங்கள், திட்டங்கள் யாவும் என்னுடையவை. பட்டம் வாங்காத பாதிப் பொறியாளாராகியிருந்தேன். மனையடி, கட்டட அமைப்புக் கலை (வாஸ்து) நன்றாகத் தெரியும்.

கட்டடத்தின் முதல் நாள் வேலைக்கு வந்தவர்கள் இறுதி நாள்வரைக்கும் நிலைக்குமாறு ஆள்மாற்றல் இல்லாமல் செய்து முடிப்பேன். மின்வேலைகள், குழாய்ப்பணிகள் முதலானவற்றுக்கு நெடுங்காலத் தொடர்புடையவர்கள் உளர். அப்பணிகள் நடக்கும்போது நானும் உதவியாளாகி உடன்நிற்பேன். கட்டுமானப் பொருள்களை வாங்குவதற்கு ஓடுவதும் என் பணி.
நிற்க.

இரண்டாண்டுகட்கு முன்பு ஒரு கட்டுமானப் பணி செய்தேன். இருபதாண்டுகட்கு முன்பிருந்த பணியொழுங்குகள் யாவும் குலைந்திருந்தன. ஆள்மாற்றி ஆள்மாற்றி நாற்பது கொத்தனார்கள் வந்து செய்தார்கள். குடியினால் உடல் வலுவிழந்தவர்கள் வந்து நின்றனர். ஏழு நாளுக்கு மூன்று நாள் பணி நடந்தது. மாலை ஆனதும் பரபரப்புக்கு ஆளாயினர். தலைக்கொத்தனார் கிறுகிறுத்துப் போய்விட்டார். “நீங்க நினைக்கிறப்பல இப்ப யார்ங்க வேலைக்கு வர்றாங்க ?” என்று கையைத் தூக்கிக்கொண்டார். குடிப் பழக்கமில்லாதவர்கள் அரிதாயினர். திட்டப்படி எதுவும் நடக்காது என்று தெரிந்தது. இனிமேல் இந்த வேலை ஆகாது என்று முடிவெடுத்திருந்தேன்.

அண்மையில் தண்ணீர்த் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் கட்டாயமாயின. தலைக்கொத்தனாரை அழைத்தேன். அவரிடம் தற்போது வடமாநிலத் தொழிலாளர் குழுவொன்று இருப்பதாகச் சொன்னார்.

“வழக்கமா வர்றவங்க என்ன ஆனாங்க ?” என்று கேட்டேன்.

“எல்லாரும் தனி வேலை பிடிச்சு செய்யறாங்க. இருக்கிறது கொஞ்சம் பேர்தான். அவங்களை என்னால தொங்க முடியலீங்க. ஒரு பெரிய கட்டடத்தைப் பிடிச்சு நல்லா மாட்டிக்கிட்டேன். இன்னொருத்தர் மூலமா இவங்க கிடைச்சாங்க. என் வீட்லயே தங்க வெச்சு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன். அவங்கள வெச்சுச் செய்யலாம்” என்று உறுதி கொடுத்தார். “நா இரண்டு வருசமா அவங்களை வெச்சுத்தான் வேலை செய்யறேன். கொரோனாவுக்கு ஊருக்குப் போனவங்க வரமாட்டேன்னு இருந்தாங்க. நான் இருபதாயிரம் பணம் போட்டுவிட்டு வரவெச்சேன்” என்றார்.

எனக்கும் வேறு வழியில்லை. பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். அரைமனத்தோடு வரச்சொல்லிவிட்டேன். தங்குவதற்கு இடம் கொடுத்தேன். பீகாரைச் சேர்ந்தவர்கள் நால்வர். போஜ்புரி, இந்தி மொழி பேசுபவர்கள். “ராம்விலாஸ் பஸ்வான் இர்க்கார் சார்.. அவர் எங்காள் சார்” என்கின்றர். அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்கள். அவர்களில் இருவர்க்கு நன்றாகவே தமிழ் தெரிந்தது. வேலையில் இறங்கினால் எவ்விடையூறும் இல்லாமல் செய்து முடிக்கிறார்கள். பணியிடையே தேவையில்லாமல் அவர்கள் பேசுவதும் இல்லை. ஒவ்வொரு நாளும் வேலைக்கு வருவார்களா என்று நாம் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வேண்டியதுமில்லை.

கட்டுமானத்தில் இப்படி உழைப்பது மிகப்பெரிது. நாம் மேற்பார்வையிட வேண்டியதேயில்லை. வினையே கண்ணாக இருக்கிறார்கள். என் இத்தனையாண்டுக் கட்டுமானச் செயல்பாட்டில் இவர்களே என்னை வியக்கடித்தார்கள். தலைக்கொத்தனார் வருவதே இல்லை. “நீங்களே வேண்டிய வேலையைச் சொல்லிச் செஞ்சுக்கங்க. அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்” என்று ஒதுங்கிக்கொண்டார்.

எப்படியோ இழுத்துப் பிடித்து என் பணிகளை முடிக்கும் வேளையை நெருங்கிவிட்டேன். மாநிலம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து அவர்கள் உழைப்பால் என் மனங் கவர்ந்துவிட்டார்கள். நெடுநாள் கழித்து நான் நற்சான்றிதழ் வழங்குவதில் தலைக்கொத்தனார்க்கும் பெருமகிழ்ச்சி.

வடமாநிலத் தொழிலாளர்கள் என்று எளிமையாய்ச் சொல்லிவிடுகிறோம். அவர்களின் இன்னொரு பக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.

மகுடேஸ்வரன்