September 20, 2021

மகளிர் மட்டும்! – திரை விமர்சனம்!

கலாசாரம் என்ற பெயரில் பன்னெடுங்காலமா பெண்களை அடிமையாக மட்டுமே பாவித்து வந்த இந்தச் சமூகத்தில் பெண் விடுதலைக்காக யாரெல்லாமோ குரல்  கொடுத்துள்ளார்கள். ஏராளமானோர் போராடியுள்ளனர். அந்த வகையில் நம் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, பெண் விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் தந்தை பெரியார். தனது வாழ்நாள் முழுவதும் சாதி மத ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகவே போராடிய அவர் பிறந்த நாளை யொட்டி சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மெண்ட் மகளிர் மட்டும் மட்டும் படத்தை வெளியிட்டு அவர் நினைவை போற்றி இருப்பது சிறப்பு.

நம் இந்தியாவில் வீட்டு வேலைகள் மட்டுமே பார்க்கும் பெண்களில் 31 சதவிகிதத்தினர் வேறு ஏதாவது ஒரு வேலையில் பணிபுரிய விரும்புவதாக அண்மையில் எடுத்த தேசிய மாதிரி ஆய்வில் தெரிய வந்திருந்தது. ஆனால் வீட்டு வேலை மட்டுமே செய்யவே அவர்கள் பல ரூபங்களில் வலியுறுத்தப்படுவதையும் அவர்களுக்கும் ஆசா பாசங்கள் உண்டு என்பதை  வெளிக் காட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்து இப்படத்தின் மூலம் நெகிழ்ச்சி  ஊட்டி இருக்கிறார் குற்றம் கடிதல் கொடுத்த இயக்குநர் பிரம்மா.

இப்படத்தில் டாகுமெண்டரி தயாரிப்பாளரான  ஜோதிகா, தன் மாமியார் வீட்டில் தங்கி இருந்த போது பேச்சுக் கொடுத்த போது தெரிய வந்த மாமியாரின் தோழிகளை மீண்டும் சந்தித்து அவர்களுடன் அதிரடியாக ஒரு மூன்று நாள் பயணத்தை தொடங்குகிறார். அந்த பயணத்தின் போது நடந்தது என்ன? நடப்பது என்ன என்பதுதான் ஸ்கீரின் பிளே.

முழுக்க பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படத்திற்கு மகளிர் மட்டும் என்ற தலைப்பு பொருத்தம்தான் என்றாலும் சொல்ல வேண்டிய விஷயங்களை இன்னும் பொருத்தமான காட்சிகள் மற்றும் சூழல்கள் மூல சொல்லத் தவறி விட்டதால் மனதில் முழுமையாக பாதிப்பை ஏற்படுத்த தவறி விட்டது. ஆனாலும் படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண்மகனும் தன் மனைவி அல்லது அம்மா அல்லது இருவரையும் நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை யோசிக்க வைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன் தான் சொல்ல வந்த சப்ஜெக்ட்டுக்கு பொருந்தும் படியான மூன்று தோழிகள் ரோலில் சிறந்த நடிகைகளைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் பிரம்மா-வை தனியாக பாராட்டியே ஆக வேண்டும். தோழிகளாக வரும் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா மூன்று பேருமே மிகச் சிறப்பாக நடித்திருப்பதோடு அவ்வப்போது நம் வீட்டுப் பெண்களை நினைவுபடுத்தும் அளவுக்கு அசத்தி இருக்கிறார்கள். அதிலும் இவர்களது பள்ளி நாட்கள் பற்றிய ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதைத் தொடுவதாக உள்ளன. 1970 காலகட்டம் ரொம்ப பொருத்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளில் இளவயதுப் பெண்களாக வரும் நடிகைகள் முகஜாடை மற்றும் உடலமைப்பில் சரியான தேர்வாக இருப்பதோடு நன்றாக நடித்தும் இருக்கிறார்கள்.

அதிலும் இப்போதெல்லாம் காமெடி அம்மாஞ்சித்தனமாகவே வலம் வரும் சரண்யா டி.வி. காம்பியர் ரோலை முடித்து விட்டு அடுத்து நொடியே படுத்த படுக்கையாக கிடந்த நிலையிலும் தன்னைத் திட்டிக்கொண்டே இருக்கும் மாமியார் மலம் ஆன துணியை மாற்றி விட்டு பாறாங்கல் முகத்துடன் பணிவிடை செய்து விட்டு அப்போதுதான் வந்த கணவனை கவனிக்கும் காட்சியில் சோகம் விரக்தி ஏக்கம் வெறுப்பு இயலாமை என் பல கலவைகளை முகத்தில் கொண்டு கொண்டு வந்து காண்பித்து அசத்தி இருக்கிறார். பானுப் பிரியா மற்றும் ஊர்வசியும் ஃபர்பக்ட்டாக தன் பங்கை செய்துள்ளார்கள்.

ஆனால் ஜோதிகாதான் கொஞ்சம் ஒட்டாத போக்கை காட்டியுள்ளார். படத்தில் புல்லட்டும் படகும் ஓட்டுவதுடன். மாமியார் ஊர்வசியுடன்  தோழிகள் மூன்று பேரையும் ஓட்டிக் கொண்டு வட மாநிலங்களில் படு கேஷூவலாக சுற்றி திரியும் போக்குக்கும் சில பல தைரியச் செயல்களை அசால்ட்டாய் செய்வதற்கும் பாந்தமாகவே இருக்கிறார்!அதே சமயம் இந்த படம் குறித்த அவர் பேட்டி ஒன்றில் சொன்னது போல் மற்ற நடிகைகளை விட இளமையாக தெரிகிறார் என்பதும் உண்மைதான். ஆனால் வசன உச்சரிப்பில் மழலைத்தனமாக வாயசைத்தும் பல நேரங்களில் உடல் மொழியை அதிகப்படுத்தியும் ஓவர் டோஸ் கொடுத்து தன் கேரக்டரின் பலத்தை குறைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு, ஆக்ரா, சதீஸ்கர் என கதையோட்டத்திற்கு தேவையான காட்சிகளையும் பயணம் செய்யும் ஒவ்வொரு லொகேஷன் களையும் எஸ். மணிகண்டனின் கேமரா மூலம் அவ்வளவு அம்சமாய் காட்டியதற்கு  தனி பாராட்டு! பெண்களை கொண்டாடும் வகையில் கிப்ரானின் இசையில் வரும் பாடல்கள் அதன் வரிகள் மூலம் பெரும் பலம் சேர்த்துள்ளது.

ஆனால் மகன் தன் தாய் மேல் காட்டும் மேல் வெறுப்பும், அதன் பிறகு அவன் மனம் திரும்பும் போக்கும் , குடிகார கணவன் திருந்துவதும் ஜஸ்ட் லைக் தட் நடந்து விடுவதெல்லாம் இல்லை என்பது இயக்குநருக்கு தெரியாததில்லை. ஒட்டு மொத்த படத்தில் அப்படி இப்படி சில செயற்கை வசனங்களும், காட்சி திணிப்புகளும் இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னால் நிஜமாலுமே குடும்பத்தோடு போய் பார்க்க தகுந்த படம் என்ற அந்தஸ்தை மகளிர் மட்டும் அடைந்து விட்டது என்பதே பெருமைதான்!

மார்க் 5 / 3. 5