மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஆன்லைனில் பார்க்கலாம்!

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஆன்லைனில் பார்க்கலாம்!

தென்னகத்தில் இருந்தாலும் அகிலத்தின் தெய்வமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் கள்ளழகர் கோயிலும் வருடா வருடம் நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கு உலகம் முழுக்க பக்தர்கள் உண்டு. அதிலும் . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம். இந்தாண்டில் மே 4-ஆம் தேதி நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால், ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டுக்கான விழாவை ரத்துசெய்ய விழாக் குழு முடிவுசெய்து விட்டது. கொடியேற்றம் இல்லாமல் மற்ற விழாக்களை நடத்த முடியாது என்பதால், முதல் முறையாக விழா ரத்துசெய்யப்படுகிறது. அதே சமயம் எனினும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை 13 பேர் கொண்ட கோவில் பணியாளர் குழு மட்டும் பங்கேற்று நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரரின் திருக் கல்யாண வைபவம் நாளை (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் நடை பெறுகிறது. இந்த நிகழ்வுகளை திருக்கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org-ல் திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை உலகம் முழுக்க உள்ள பக்தர்களும் இணையதளம் மூலம் கண்டுகளிக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சார்வரி வருடம் சித்திரை பெருவிழா வரும் 25-ம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் திருக்கோவில் இணை ஆணையர் நடராஜன் சமீபத்தில் விடுத்திருந்த செய்தி குறிப்பில், அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர் களின் ஆத்ம திருப்திக்காகவும் தலபுராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளுடன் சேர்த்து நாளை மே மாதம் 4-ம் தேதி திங்கட் கிழமை யன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்போதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சார்யார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள்.

மேற்கண்ட இந்த நிகழ்வுகளை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org-ல் திருக்கல்யாண நிகழ்வினை நேரடி யாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

மதுரையை ஆட்சி செய்து வரும் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் திருப்பரங் குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்டியை சுமந்து, மீனாட்சி பட்டணத்திற்கு செல்வார். இதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணத்தில் பங்கேற்பார். இதில் குன்றத்து பவளக்கனிவாய் பெருமாள், தனது தங்கை மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுப்பார்.

இத்தகைய நடைமுறை காலம் காலமாக நடைபெற்று வந்துள்ளது. மீனாட்சி அம்மன் திருக் கல்யாணம் நடைபெறுவதற்கு முதல் நாளே திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு செல்வது மரபு. அந்த வகையில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி திருப்பரங்குன்றத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சகல பரிவாரங்களோடு பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் நேற்றே புறப்பட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஊரடங்கு காரணமாக சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கையின் திருக்கல் யாணத்தில் தாரை வார்த்து கொடுக்காத நிலை வரலாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று இருந்தால் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தில் பவளக் கனிவாய் பெருமாள் பங்கேற்று தாரை வார்த்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அம்மனின் திருக்கல்யாணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், பல்லாயிரக்கணக் கான பக்தர்களின் வேண்டுகோளுக்காகவும் உற்சவமூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக் கிறது. அதுவும் பக்தர்கள் இல்லாமல் 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணம் நடை பெறுவது குறிப்பிடத்தக்கது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!