September 27, 2021

எம்.ஜி. அர். சிவாஜி மாதிரி நடிக்கணும்! – கபாலி விவகாரத்தில் ஐகோர்ட் ஜட்ஜ் அட்வைஸ்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து, வரும் ஜூலை 22ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் கபாலி. இப்படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்ககோரி தயாரிப்பாளர் தாணு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதியின்றி இயங்கும் 225 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

kabali jy 16

மேலும் கபாலி திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், “அப்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள் தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது, நல்ல கருத்துகளைப் போதிப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன. ஆனால், அண்மைக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்கள், குடும்ப பெண்களின் உயர் பண்புகளை கெடுக்கும் வகையில் பெண்களை வில்லியாகச் சித்திரிக்கின்றன.பாசம், வன்முறை, கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன.

கொடூர குற்றவாளி கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர். இது ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில் நடித்தனர். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது. ஆனால், இப்போது சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு சினிமாதான் காரணம்.

முன்னணி கதாநாயகர்களுக்கு அறிவுரை: முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். மதுகுடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும்.மேலும், திரைப்படத்துறை என்பது பெரிய அளவில் பணம் புழக்கம் உள்ள துறையாகும். இந்த துறை பொதுமக்களை நேரடியாக சென்றடைந்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மத்திய திரைப்பட அமைப்புகளுக்கு அறிவுரை: 2013-ஆம் ஆண்டு கம்பெனி சட்டம், 7-ஆவது அட்டவணையில், பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத் திரைப்படத் துறை மிகப்பெரிய நிறுவனமாகச் செயல்படுவதால், உயர்நீதிமன்றம் கூறியுள்ள இந்த கருத்துக்களையும், சமூக பொறுப்புணர்வுடன், இந்த துறை செயல்படுவதை மத்திய தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத்துறை முதன்மை செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் உறுதி செய்யவேண்டும்” என்றார்.