கல்வி, பாதுகாப்பு, டெக்னாலஜி, விழிப்புணர்வு ! – அரசுக்கு அடுக்கடுக்காய் அடவைஸ் கொடுத்த ஐகோர்ட்!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பொதுமக்களின் உயிருக்கு உள்ள உத்தரவாதம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய சென்னை ஐகோர்ட் நீதிபதி – ஹெல்மெட் புகழ் என்.கிருபாகரன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.கே.கௌலுக்கு மனுவை அளித்தார்.
இந்த மனுவை பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “அறிவியல் வளர்ச்சி மேம்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களைக்கூட பொருத்தாதது ஏன்?
கேமராக்கள், நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு போதுமான நிதியை ஒதுக்காதது ஏன்?.
காவல் துறை, ரயில்வே பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?
24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுபாட்டு மையங்களை ஏன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உருவாக்கக் கூடாது?
ஆந்திரத்தில் அரசு தனியார் பங்களிப்புடன் “ஆந்திர பிரதேசம் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம்-2013′-ஐ சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏன் அமல்படுத்தக் கூடாது அல்லது இந்தச் சட்டத்தை ஏன் மத்திய அரசே இயற்றக்கூடாது?
பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவருடைய மனோபாவத்தை அளவிடும் பணிகளை ஏன் செய்யக்கூடாது?
பெண்களுக்கு மதிப்பளிக்கும் புதியக் கல்வியை ஏன் தொடங்கக்கூடாது?
சுவாதி படுகொலை நிகழ்வுக்கு பொறுப்பேற்றும், அவருக்குப் பாதுகாப்பு வழங்க தவறியதற்கும், உடலை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைமேடையிலேயே போட்டதற்கும் இழப்பீடாக ரயில்வே நிர்வாகம் ஏன் சுவாதி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கூடாது?
ரயில்வே போலீஸில் பெண் போலீஸாரின் எண்ணிக்கையை ஏன் அதிகப்படுத்தக்கூடாது?
அரசு இது தொடர்பாக ஏன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது?
இந்தக் கேள்விகளுக்கும் மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக முதன்மைச் செயலாளர், உள்துறை தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 4-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்