தமிழக அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் தடை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவதெல்லாம் சட்டவிரோதம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின்படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை முன்பு பின்பற்றப்பட்டு வந்தது. ரோஸ்டர் முறையில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

அதற்கு மாற்றாக தமிழகத்தில் 2016ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சேவை நிபந்தனை கள் சட்டம் கொண்டு வரப்பட்டது (Tamilnadu government servants(conditions of service) act 2016). இதன் படி, தமிழகத்தில் மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்கப் பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அப்போது விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையை நீதிமன்றத்தால் ஏற்க முடியாது எனவும், தமிழக அரசு கையாண்ட இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாக கருதப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆதலால் அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது சட்ட விரோதம் எனவும், இது தொடர்பான தமிழக அரசின் புதிய சட்டத்திலுள்ள 1, 40, 70  ஆகிய 3 பிரிவுகளும் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் விரோதமானது எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் அந்த 3 சட்டப் பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் அறிவித்தனர்.