தமிழகத்தில் பேனர்கள் வைக்கத் தடை !- சென்னை ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் பேனர்கள் வைக்கத் தடை !- சென்னை ஐகோர்ட் உத்தரவு!

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி அதிகாரியின் முறையான உரிமம் / அனுமதி பெறாமல் எந்தவொரு நபரும் எந்தவொரு இடத்திலும் விளம்பரப் பலகைகள் / மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் அட்டைகளை வைக்கக் கூடாது. இச்சட்ட விதிகளை மீறி, விளம்பரப் பலகைகளை வைப்போர் மீதும், இச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை தடுப்போர் மீதும், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அல்லது இந்த இரண்டும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.  ஆனாலும் நாடு முழுவதும் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கிறது; அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்ற வழக்கில் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை வைக்கத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நம் தமிழ்நாடெங்கும் காது குத்தல் முதல் திருமணம் வரை, அரசியல் கட்சி கூட்டங்கள் முதல் மாநாடுகள் வரை, பாடி ஸ்பிரே முதல் பிரா வரை, மரண அறிவிப்பு பேனர்கள் என எதெற்கெடுத் தாலும் விளம்பரப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகரத்தின் அழகுகள் பாழ் படுவதுடன் போக்குவரத்து பிரச்னைகளும்  ஏற்படுகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த விளம்பர பலகை பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும் அண்மையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெ நினைவு தினம், சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா ஆகியவற்றுக்காகப் பேனர்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் சாலைகளை மறித்து மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப் படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பேனர்களைத் தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளைப் போட்டாலும், அதை முழுமை யாக நிறைவேற்றுவதில்லை. அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியாற்றலாமே என்று கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் பேனர் வைக்கின்ற எந்த அரசியல் கட்சியினர் மீதும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை அவ்வாறு இருந்தாலும் பேனர் வைக்கப்படுகின்ற போது ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், அதை யார் பிரிண்ட் செய்கிறார்கள். மேலும் எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறை களை எல்லாம் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட ஏன் நடவடிக்கை இல்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 19) தடை விதித்து உள்ளது. மேலும் பேனர்கள் வைப்பதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே விதமான நடை முறைகளைப் பின்பற்றுகின்றன என்று குறிப்பிட்ட நீதிமன்றம் விதிகளையும் நீதிமன்ற உத்தரவு களையும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அத்துடன் விதிகளைக் கடைப்பிடிப்பதாக தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!