அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

உணவில் இப்போதெல்லாம் பலர் மீண்டும் கல் உப்புதான் பயன் படுத்துகிறார்கள் உண்மை. ஆனால், அரசு அனைத்து உப்பு உற்பத்தியாளர்களையும் உப்பில் அயோடின் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது. தற்போதுள்ள ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.’ (FSSAI-Food Safety and Standards Authority of India) சட்டம், உணவுக்கான உப்பில் அயோடின் சேர்க்காமல் விற்பதை தடைசெய்கிறது. சிகரெட்டை தடைசெய்ய முடியாத அரசு, அயோடின் சேர்க்காத உப்பை இவ்வளவு பிரயத்தனப்பட்டு தடைசெய்வது விந்தை. அயோடின் உப்பு காரணமாக நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எனவே, அதைத் தேவைப்படுபவர்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற கோஷம் கொஞ்சம் அதிகரித்து வரும் சூழலில் இயற்கை உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பை விற்க வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உடலின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை தூண்டும் திறன் அயோடினுக்கு உள்ளது. உணவின் மூலம் அயோடின் தேவை நிறைவடையாததால், பாகுபாடின்றி அனைவரையும் சென்றடையும் உப்பு மூலமாக அயோடினை கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை மூலமாக அயோடின் பற்றாக்குறை குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதிலும் உள்ள கடைகளிலிருந்து 4 ஆயிரத்து 615 மாதிரிகள் சேரிக்கப்பட்டு சோதனைக்குட் படுத்தப்பட்டன.

முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட இன்னமும் சில மாவட்டங்கள் அயோடின் உப்பு பயன் பாட்டில் பின் தங்கியிருப்பது இந்த கள ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் அயோடின் உப்பு பயன்பாட்டில் பின் தங்கிய நிலையில் உள்ளன.

கல் உப்புக்களில் அயோடின் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 50 விழுக்காடு குறைவாக உள்ளது. தூளாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உப்புகளிலும் இதே நிலைதான் காணப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட உப்பு பாக்கெட்டுகளில் மட்டுமே 90 விழுக்காட்டுக்கு மேல் சரியான அயோடின் அளவுடன் விற்பனை நடைபெறுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைவான அயோடினுடன் உப்பை விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சரியான அளவு அயோடினை உணவில் எடுத்துக் கொள்ளாததால் ஆற்றல் குறைந்த மன செயல்பாடு, குறைவான உழைப்புத் திறன், முன்கழுத்து கழலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இறந்தே பிறப்பது , பிறவிக்குறைபாடுகள், அறிவு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையேதான் இந்த உப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தூத்துக்குடி உப்பளங் களில் பல ஆண்டுகளாக இயற்கை முறையில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும், இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண உப்பை விற்க கூடாது என்றும், அயோடின் கலந்த உப்பையே விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஒழுங்குமுறை விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மனுதாரர், இதனால் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து, இயற்கை உப்பை விற்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.