June 21, 2021

விளை நிலத்தில் வீடு கட்டினால் ரிஜிஸ்டர் பண்ணப்படாது! – ஐகோர்ட் ஆர்டர்

ரொம்பக் காலத்துக்கு முன்னாடி இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். விளைநிலங்கள்தான் விலை மதிப்பில்லா நிலங்கள் என்ற நிலை இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அவை விலை நிலங்களாக மாறிப் போன கொடுமையை என்ன சொல்வது! கிராமத்தில் ஒருவர் செல்வந்தர் என்று நினைப்பது அவர்களுக்கு நில உரிமை இருப்பதுதான். அந்தக் காலக் கணக்குப்படி ஒரு குழி நிலம் இருந்தாலே தலை நிமிர்ந்து நடப்பார்.

land sep 10

இந்த நிலை இன்று தலைகீழாகப் போய் விட்டது; விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் என்கிற வியாபார வலைக்குள் சிக்கி விட்டது. பயணம் செய்பவர்கள் பல விளம்பரப் பலகைகளைப் பார்க்கலாம்; ரியல் எஸ்டேட் விளம்பரம் – வீட்டு மனை விற்பனை என்று பதாகையைப் பார்க்க முடியும். நெல் வளர்ந்த வயல்களில் கான்கிரீட் வீடுகள் ஓங்கி நிற்கின்றன. கிராமங்கள் நகர்ப்புறமாவது என்பது இந்த வகையில் தான் இருக்கிறது. 2011க்கும் – 2016க்கும் இடையில் 18,67,502 தமிழ் நாட்டின் விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலைக் கை விட்டு விட்டனர்.

வீட்டு மனைகளாக விற்க வேண்டுமானால், அவை விளை நிலங்கள் அல்ல என்ற தடையில்லாச் சான்றிதழ் வேளாண் துறை இணை இயக்குநரிடம் பெற வேண்டும் என்றிருந்த நிபந்தனைகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் என்பது நலிந்த ஒன்றாகி விட்டது. காவிரி நீர் உரிமையைப் பறி கொடுத்ததால், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கண்ணீர் உகுக்கும் நிலை. எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடத்தப் பட்டன. அரசுகள் அனைத்துக் கட்சி மாநாடுகளைக் கூட்டித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டதுண்டு. அனைத்துக் கட்சிக் குழு இந்தியப் பிரதமர், குடியரசு தலைவரைச் சந்தித்து மனுக்கள் கொடுத்துக் கொடுத்து அலுத்துப் போனதுதான் மிச்சம்.

இந்நிலையில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றால், எந்தக் காரணம் கொண்டும் பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக் கூடாது என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு இதுதான்:

3 ஆண்டுகளுக்கு மேல் விளையாமல் தரிசாக போடப்பட்டுள்ள விளை நிலங்களை குடியிருப்பு பகுதிகளாகவோ அல்லது பிற உபயோகத்திற்காகவோ மாற்றுவதற்கு எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் 5 சதவீத இடத்துக்கு மட்டும் அனுமதி கோரிவிட்டு, எஞ்சிய 95 சதவீத இடம், முறைகேடாக வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. சென்னையில் 80 சதவீதமாக இருந்த விளைநிலப் பகுதி இப்போது 15 சதவீதமாகச் சுருங்கி விட்டதாக செய்திகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விளைநிலங்களை வீட்டு மனைகளாக “லே-அவுட்’ போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவிதக் காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது.

இதன் மூலம் விளைநிலங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாறுவது தடுக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வெள்ள பாதிப்பைத் தடுக்கவும் இது உபயோகமாக இருக்கும்.அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் விரிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 21-க்கு ஒத்திவைத்தனர்.