டிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி!

உலகளவில் பயன் படுத்தப்படும் பிரபலமான தளங்களில் ஒன்றான டிக் டாக் ஆப் சரவதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களில், இந்தியாவில் மட்டும் சுமார் 300 மில்லியன் வீடியோக்கள் டவுண் லோட் செய்துள்ளன. இந்நிலையில் அந்த ஆப் கலாசாரத்தை சீரழிப்பது மட்டுமன்றி ஆபாசத்தை ஊக்குவிப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எனவே, அரசின் பரிந்துரையின்படி கடந்த 18-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து டிக் டாக் ஆப்பின் உரிமையாளரான ByteDance என்ற நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தடையை நீக்குவது குறித்து முடிவெடுக்கச் சென்னை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து ஆப் தடை குறித்து ஆய்வு செய்ய அரவிந்த் தத்தார் என்பவரை நியமனம் செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரின் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெறும் தடை மட்டுமே இதற்குத் தீர்வாகாது என்று அவரது கருத்தைத் தெரிவித்தார். மேலும், டிக் டாக் தரப்பின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆன்லைனில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தே அதிகம் கவலைப்படுவதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த திடீர் தடையால் தினமும் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ByteDance நிறுவனம் தெரிவித்திருந்தது.`அது மட்டுமின்றி 18 வயதுக்குக் குறைவானவர்கள் ஆப்பில் வீடியோவை அப்லோட் செய்ய முடியாது. மேலும் ஆபாச வீடியோக்களையும் அப்லோட் செய்ய முடியாது, அதை மீறி பதிவிட்டாலும் அவை உடனடியாக நீக்கப்பட்டுவிடும். தடைக்குப் பிறகு 6 மில்லியன் வீடியோக்களை நீக்கியிருக்கிறோம். மேலும், இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆப் செயல்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஆபாச வீடியோக்களையோ, சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோக்களையோ பதிவேற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. மேலும், அளித்த வாக்குறுதிகளை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகக் கருதப்படும்’ எனக் குறிப்பிட்டு தடையை நீக்கி உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவால் கூடிய விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டிக் டாக் மீண்டும் இடம்பெறலாம்.