May 6, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை ;ஐகோர்ட் அதிரடி!

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்த மனுவில், “உள்ளாட்சி தேர்தலில் எல்லா சமூகத்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

ban oct 4

ஆனால் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், சுழற்சி அடிப்படையில் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து போன்ற பதவிகளுக்கு எஸ்.டி. பிரிவினர்களால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதி நிதித்துவம் வழங்கப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 19ந் தேதி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணையிலும், எஸ்.டி. பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையையும், மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையையும் அரசியல் அறமைப்புச் சட்டத்துக்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும் எதிரானது என்று அறிவிக்கவேண்டும். இந்த அரசாணை மற்றும் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும். எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்”இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (திங்கட்கிழமை) பிறப்பிப்பதாக ஐகோர்ட்டு வழக்கு விவர பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதி என்.கிருபாகரன் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் தரப்பு மூத்த வக்கீல் வில்சன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரைப் பார்த்த நீதிபதி, ‘உங்கள் வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பிப்பதாக கூறியிருந்தேன். ஆனால், தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. அதனால், நாளை (செவ்வாய்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும்’ என்றார்.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன் வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிட்ட நீதிபதி அந்த மூன்று அரசாணைகளையும் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.