கிரண் பேடி-க்கு சென்ட்ரல் கவர்மென்ட் கொடுத்த எக்ஸ்ட்ரா பவர் செல்லாது!

அரசு நிர்வாகத்தில் உயர்ந்தவர் நீயா? நானா? என்ற யுத்தம் நடந்து வந்த புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புதுவை முதல்வர் ‘ஜனநாயகம் வென்றுள்ளது. 3 ஆண்டாக நாங்கள் போராடிய போராட்டத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வந்தேன். இதை உறுதி செய்யும் வகையில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பு கவர்னரின் செயல்பாட்டிற்கு கிடைத்த பதிலடி’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் இருந்து வருகிறது. புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தொடர்ந்து தலையிடுவதாக புதுவை முதல்வரும், அமைச்சர்களும் புகார் தெரிவித்து வந்தனர். இதன் உச்சக்கட்டமாக நிதித் ப்துறை தொடர்பான ஆவணங்களை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் கால தாமதம் செய்வதாக கூறி கவர்னர் அலுவலகம் மீது முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து கவர்னர் முதல்வரை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும் மாநில அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் தொடர்ந்து தலையிடுவதாக முதல்வர் குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச, ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன். இவர் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, அரசின் ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு இணையாக, துணை நிலை ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, உத்தரவுகள் பிறப்பிப்பது என, வரம்பு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு சமம். எனவே துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, துணை நிலை ஆளுநரின் சார்பில் அவரது தனிச்செயலாளர் தரன் தாக்கல் செய்த பதில் மனுவில், “துணை நிலை ஆளுநருக்கு என பிரத்யேக அதிகாரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளன, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியே துணை நிலை ஆளுநர் தான் எனவும் கூறப்பட்டது. மேலும், நிர்வாக ரீதியாக துணை நிலை ஆளுநர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் குற்றம் காண முடியாது என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.மகாதேவன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், “புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு 2017ல் பிறப்பித்துள்ள உத்தரவு செய்யப்படுகிறது”என்று குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவால் புதுவை அரசியலில் மீண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் பேசும் போது, “சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை அரசியல் சாசன 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவில் கவர்னர் தலையிட முடியாது என்றும் அரசின் அன்றாட நடவடிக்கைகளிலும் கவர்னர் தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என நாங்கள் கூறியபோது, மத்திய உள்துறை அமைச்சகம் மாற்று கருத்தை வெளியிட்டது.

அதோடு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சீனியர் வக்கீல்கள் ப.சிதம்பரம், வேணுகோபால், சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இன்று இவ்வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நிர்வாகம், அரசு அதிகாரிகள் நியமனம், நிதி அதிகாரம் ஆகியவற்றில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் ஜன நாயகம் வென்றுள்ளது. 3 ஆண்டாக நாங்கள் போராடிய போராட்டத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வந்தேன். இதை உறுதி செய்யும் வகையில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு புதுவை மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கவர்னரின் அதிகார கொட்டத்தை அடக்குவதற்கும் வழி வகுக்கும். நீதி வென்றுள்ளது. புதுவை மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு கவர்னரின் செயல்பாட்டிற்கு கிடைத்த பதிலடி.

கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல் தடுத்ததற்கும், முடக்கம் செய்ததற்கும் கவர்னர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசை முடக்குவதற்காக கவர்னர் கிரண்பேடியை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். எனவே, பிரதமர் மோடி இந்த தீர்ப்பிற்கு பதில் தர வேண்டும்” என்று அவர் கூறினார்.