October 17, 2021

தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி அக்டோபர் மாதம் 4–ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இம்மாதம் 18 ம் தேதி உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறி இருந்தார். சபாநாயகரின் இந்த உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று பகல் 12.10 மணியளவில் துவங்கியது. இதில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், தினகரன் ஆகியோர் தரப்பில் கபில் சிபில், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, அரிமா சுந்தர் உள்ளிட்ட சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.

தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து சபாநாகர் தனபால் சார்பில் அரிமா சுந்தர் வாதிட்டார். தினகரன் தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வாதங்கள் வைக்கப்பட்டன. கோர்ட்டில் அரசுகளை குறை கூறக்கூடாது. இது வழக்கிற்கு தேவையற்றது என அரிமா சுந்தர் எதிர்ப்பு தெரிவித்தார். தினகரன் தரப்பை தொடர்ந்து சபாநாயகர் தனபால் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தர் வாதிட்டார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என சபாநாயகர் சார்பில் கேட்கப்பட்டது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கேட்கப்பட்டது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் இருக்க அவகாசம் தேவை எனவும் கேட்கப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளோம் என்று தெரிவிக்க
ப்பட்டது.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (செப்.20) முடியும் நிலையில், தடை நீட்டிக்கப்பட்டது.சபாயாகர், முதல்வர், தலைமை செயலாளர், கொறடா ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.தினகரன் தரப்பின் முக்கிய கோரிக்கையான, 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்பதை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவித அறிவிக்கையும் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணயை அக்டோபர் 4ம் தேதிக்கு நீதிபதி துரைசாமி ஒத்திவைத்தார். அத்துடன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தனித்தனியாக மனு தாக்கல் செய்த போதும், 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்துமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி துரைசாமி, 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.