January 29, 2023

மாமனிதன் குறித்து டைரக்டர் சீனு ராமசாமி சொன்னது இது : “எத்தனையோ அடையாளம் காட்டப்படாத மாமனிதர்கள் நம் அருகில், நாம் வசிக்கும் தெருவில், ஏன்… நம் குடும்பத்தில் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள்… அவரைக் கொண்டாடுங்கள்… ‘மாமனிதன்’ என்பவன் தன்னை உணர்ந்தவன்… அப்படிப்பட்ட ஒரு மனுஷனுடைய கதைதான் ‘மாமனிதன்’. இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்வதானால் அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம் காணிக்கை. நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பதுதான் இந்த மாமனிதன் கதை.

அதாவது இளையராஜாவின் சொந்த ஊரான தேனி டிஸ்ட்ரிக் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் ராதாகிருஷ்ணன், மாதவன் (ஷாஜி சென்) என்பவரால் ஏமாற்றப்படுகிறார். அந்த ஊர்க்காரர்களின் ஒட்டு மொத்த பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு மாதவன் தலைமறைவாக, ஊராரின் கோபம் ராதாகிருஷ்ணனை நோக்கி திரும்புகிறது. இந்த பிரச்சினைகளை அவர் எப்படி சமாளித்தார்? அந்த ஊர் மக்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? குழந்தைகளை படிக்கவைத்தாரா இல்லையா? இறுதியில் என்ன ஆனது? – இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் ‘மாமனிதன்’ படத்தின் திரைக்கதை.

ஹிட் ஆன தர்மதுரை படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து தர்மதுரையில் கொடுத்த அதே வெற்றியைக் கொடுக்க சீனு ராமசாமி முயற்சி செய்துள்ள இப்படம், அதில் வெற்றி பெற்றதா என்றால் கேள்விக் குறியே! படம் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் திருப்பம் எதுவும் இல்லாமல் ஃபிளாட்டாகவே சென்று முடிவதால் ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடிய வகையிலான காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிவதால் படத்திற்கு அது பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. மற்றபடி கதாபாத்திர தேர்வு மற்றும் காட்சி அமைப்புகள் பல இடங்களில் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

சீனு ராமசாமியே சொன்னது போல் ‘மாமனிதன்’ கதை உருவாக உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த மனிதர் யார்? என்று கேட்டால் நிறைய பேர் எந்த பிரதிபலனும் பார்க்காமல், எந்த பயன்களையும் அனுபவிக்காமல் ஏதோ ஒரு வகையில் இந்த உலகிற்கும் சமூகத்திற்கும் எதையோ செய்துவிட்டுச் சென்றிருப்பார்கள். இப்படி நிறைய மனிதர்களை நான் கடந்து வந்திருக்கிறேன். ஏன், என் குடும்பத்திலேயே அப்படிப்பட்டவர்கள் உண்டு. அவர்கள்தான் இந்த மாமனிதன் படத்திற்கான விதை. கதையைப் பொறுத்தவரை பாதி நிஜம் பாதி கற்பனை. நிச்சயமாக இது ஒரு மனிதனையோ அல்லது ஒரு மிகப்பெரிய வரலாற்று உண்மையையோ சொல்லக்கூடிய கதை கிடையாது. படம் ஆரம்பித்த தருவாயில் இது இவரின் வாழ்க்கை வரலாறு அவரின் வாழ்க்கை வரலாறு என நிறைய வதந்திகள் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால், இது ஒரு நபரின் வாழ்க்கை வரலாறு அல்ல, பல மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று சொன்னதே இப்படத்தின் வரலாறு.

இப்பட நாயகன் விஜய்சேதுபதிக்கு ஈடாக ஆனால் எல்லை மீறாமல் அறத்துடன் வரும் காயத்ரி நம்மை வெகுவாக கவர்கிறார். தன் ஒழுக்கத்தை தவறாக பேசும் அண்ணனை அடிக்க குழவிக் கல்லால் தாக்க முற்படும் போது ஆகட்டும் அந்த நிமிடமே விஜய் சேதுபதி வந்து என்னுடன் வா என்று அழைக்கும் போது அவர் பின்னாலேயே பூனைக்குட்டி போல் வாழ்க்கையை தொடர்வது ஆகட்டும் காயத்ரியின் நடிப்பு வேறு உயரம்.

இவர்களுக்கு சற்றும் சளைக்காத ஒரு இஸ்லாமியரின் பாத்திரத்தில் வருகிறார் குரு சோமசுந்தரம். நடிப்பில் இயல்பான தன்மையுடன் இவரைப் போன்று நடிக்க தமிழில் ஆள் இல்லை என்று சொல்ல முடியும். உண்மையில் பார்க்கப்போனால் படத்தின் மாமனிதன் இவர்தான். இவருடைய பாத்திரம் நடிப்பில் ஒரு அட்சய பாத்திரம். அத்துடன் கேரளாவில் விஜய்சேதுபதிக்கு ஆதரவு கரம் நீட்டும் கிறிஸ்தவ பெண்மணி மற்றும் நண்பர்கள் மனதில் நிற்கிறார்கள. இவர்களில் அனிகாவும் நம் கருத்தை கவரும் ஒரு பாத்திரம்.

இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல்களை இன்னமும்கூட சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். மற்றபடி பின்னணி இசையில் உணர்ச்சிகரமான காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு நெகிழச் செய்துள்ளனர்.

சுகுமாரின் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணை புரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்தோடு மட்டும் எடுக்கப்படும் காட்சிகள் எதுவும் இன்றி மிகவும் எளிமையாகவும், ராவாகவும் படத்தைக் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி அதை இன்னமும் சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கலாம். அதிலும் தன் குடும்பத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்பவனை மாமனிதன் என்று சொன்னால் ஊருக்காக வாழ்பவனை என்ன சொல்வது என்ற கேள்வியை எல்லாம் எழுப்பி அனுப்புகிறது.

மொத்தத்தில் மாமனிதன் – ஓல்ட் ஒயின்

மார்க் 2.75/5