December 4, 2021

ராஜ்யசபா தமிழக புதிய எம்.பி.-கள் பதவி ஏற்பு!

நாடு முழுவதும் காலியான 61 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு மார்ச் 26 மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு லாக்டவுன் காரணமாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படாமலேயே தள்ளிப்போனது. இந்நிலையில் அவர்களுக்கு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கொரோனா அச்சம் காரணமாக 61 புதிய எம்.பி-க்களில், 45 பேர் மட்டுமே இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். மீது உள்ளவர்கள் மற்றொரு நாளில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் காலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், போட்டியின்றி திருச்சி சிவா, அந்தியூர் செந்தில், என்.ஆர்.இளங்கோ, தம்பிதுரை, கே.பி. முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 61 எம்.பி-க்களில் 49 பேர் புதிதாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். 12 பேர் ஏற்கனவே மாநிலங்களை உறுப்பினர்களாக இருந்தவர்கள். பதவிப்பிரமாணம் செய்து வைத்தபின் பேசிய வெங்கையா நாயுடு, புதிய எம்.பி-க்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறக் கூடாது என தெரிவித்துள்ளார்.