மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று விற்பனை!- அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் எதெதற்கோ சிண்டிகேட் போட்டி டிமாண்டை ஏற்படுத்து போல் ஆற்று மணலுக்கும் மாஃபியா கும்பல் குறி வைத்து தட்டுப்பாடை ஏற்படுத்தியது. இதை கவனத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீட்டிற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப் படவுள்ளது என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை நேற்று(அக்டோபர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல், அடுத்த ஆண்டு முதல் மணல் வாங்கு வோரின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, எண்ணூர், தூத்துக்குடியில் 100 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு மணல் விற்பனை செய்யப்படும்.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் மணல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒன்றிற்கு 5 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. வீடுகளுக்கே சென்று மணல் வழங்கும் திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் பட்சத்தில் இறக்குமதி அளவு அதிகரிக்கப்படும். தற்போது வரை 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் தேதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மணலைப் பெறுவதற்கு TNsand என்ற இணையதள மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு யூனிட் மணல் ரூ.9,990க்கும், 2 யூனிட் மணல் ரூ.19,980க்கும், 3 யூனிட் மணல் ரூ.29,970க்கும், 4 யூனிட் மணல் ரூ.39,960க்கும், 5 யூனிட் மணல் ரூ.49,950க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.