June 23, 2021

அண்ணா பல்கலை. துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனம்!.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த 2016 -ம் ஆண்டு மே முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன.  கடந்த வாரம், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்கான நேர்முகத்தேர்வு, ஆளுநர் மாளிகை யான ராஜ்பவனில் நடந்தது. தேர்வுக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி, மூன்று பேராசிரியர்களைத் தேர்வுசெய்து ஆளுநரின் பார்வைக்கு அனுப்பியுள்ளது.இந்த மூன்று பேராசிரியர்களில், பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத்தலைவராகப் பதவி வகித்த சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவராஜ், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பா மற்றும் சென்னை ஐஐடி-யின் கணிதத்துறை பேராசிரியர் பொன்னுசாமி.  இவர்கள் மூன்று பேரும், இன்று ஆளுநரைச் சந்தித்துப் பேசி உள்ளனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக 24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும் பணியாற்றியவர். பஞ்சாப் மாநிலம் ரோபார் ஐஐடியிலும் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
150 ஆய்வு கட்டுரைகளையும் அவர் வெளியிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக எம்.கே.சூரப்பா இந்த பதவியில் இருப்பார்.  இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே  தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் போக்கு தொடருகிறது. இசைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் பிரமீளா குருமூர்த்தி, சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதைப்பற்றி ஆளுநர் பன்வாரிலால் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பேராசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காவிரி பிரச்சனையில் தமிழகம் பெரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் நியமிக்க இருப்பதாக கூறப்படுவது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.