December 7, 2021

கருணாநிதி மவனா பிறந்தது என்னோடத் தவப் பயன்! – ஸ்டாலின் நெகிழ்ச்சி

திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் , “இது கருணாநிதியின் சொந்த மண் என்றால், எனக்கும் சொந்த மண் தான். ஆகவே சொந்தங்களிடம் உரிமையோடு வாக்குகேட்க வந்துள்ளேன். சாதனை நிகழ்த்தப்போகிற திருவாரூர் தொகுதிக்கு வந்து வாக்குகள் சேகரிப்பதிலே பெருமை கொள்கிறேன். பூரிப்படைகிறேன்.1957-ல் முதலில் தேர்தலில் போட்டியிட்ட தலைவர் தன் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவரிடம் இருந்த 1335 என்ற எண் கொண்ட பியட் காரில் குளித்தலை தொகுதிக்கு புறப்பட்டார். அன்று அவருடன் சென்றது முரசொலி அலுவலகத்தில் இருந்து ஒரு பழைய வேன். அதில் பிரசார சாதனங்களாக அச்சடிக்கப்பட்ட துண்டுத்தாள்கள், ஒரு டேப் ரிக்கார்டர் ஆகியவைதான். அப்படி முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற கருணாநிதி இன்றைக்கு பேஸ்புக்கில் இருக்கிறார், ட்விட்டரில் இருக்கிறார். ஜெயலலிதாவை போல் ஹெலிகாப்டரில் பறந்து வரவில்லை, தனி விமானத்தில் பறந்து வரவில்லை.

stalin may 10

இன்றைக்கு ஜெயலலிதா “தவ வாழ்வு” வாழ்வதாக சொல்கிறார். தவ வாழ்வு என்றால் முற்றும் துறந்த முனிவர்கள் வாழக்கூடியது. ஆனால் கருணாநிதியின் தவ வாழ்வை இந்த நாடே நன்றாக அறியும். தான் வாழும் புகழ்பெற்ற இல்லத்தை, அதுவும் எப்படிப்பட்ட இல்லம் என்றால், ஏதோ எங்களுக்கு பங்கு இருக்கிறது என்பதற்காக நான் சொல்லவில்லை. அந்த இல்லத்திற்கு எத்தனையோ அகில இந்திய தலைவர்கள், அகில உலக அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் வந்து அமர்ந்து விவாதித்த இல்லம். அந்த வீட்டை தனது 87-வது பிறந்த நாளில் மருத்துவமனைக்காக தானம் செய்த ஒரே தலைவர் கருணாநிதி தான்.

“இலவச மருத்துவமனைக்கு வீட்டை தானமாக வழங்கியது மன நிறைவைத் தருகிறது” என்று அந்த மாபெரும் தலைவர் அந் நிகழ்ச்சியில் சொன்ன போது இது தானே “தவ வாழ்வு” என்று நாங்கள் கருதியதுண்டு. ஆக, தவ வாழ்வு வாழ்வதாக சொல்லும் ஜெயலலிதாவை பார்த்து நான் கேட்கிறேன், நீங்கள் போயஸ் தோட்டத்தை கொடுக்க வேண்டாம், 900 ஏக்கரில் உள்ள கோடநாட்டை மக்களுக்கு தானம் செய்து விட்டு பிறகு ஜெயலலிதா “தவ வாழ்வு” பற்றி பேசட்டும். நானும் ஒப்புக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமல்ல, எப்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ, எப்போதெல்லாம் ஜெயலலிதா முதல்-அமைச்சராக வருகிறாரோ அப்போதெல்லாம் புறக்கணிக்கப்படுகிற மாவட்டமாக திருவாரூர் இருக்கிறது. கருணாநிதி ஆட்சி காலத்திலே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மே 16-ந் தேதி நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகளைத் தொடர்ந்து, மே 19-ந் தேதி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கருணாநிதி 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது, திருவாரூருக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்படும். தன்னை வளர்த்த திருவாரூரை இன்னும் இன்னும் வளர்த்தெடுக்க தனி அக்கறை செலுத்தி, இந்தியாவே கவனிக்கக்கூடிய ஒரு நகரமாக, மாவட்டமாக இதனை உருவாக்கித்தருவார்.

கருணாநிதியின் மகன் என்ற பெருமையோடு உரிமையோடு உங்கள் முன் நிற்கிறேன். நான் அவர் போட்டியிடும் மாவட்டத்தில் இன்று உங்களை சந்திக்கிறேன். நேற்று அவர், நான் போட்டியிடும் சென்னை மாவட்டத்தில் மக்களை சந்தித்தார். இந்த வரலாறு வேறு யாருக்கும் கிடைக்குமா? அதுமட்டுமல்ல, என்னைப் பற்றி குறிப்பிட்டு, என்னுடைய உழைப்பை, தேர்தல் களப்பணியை, பிரசாரத்தை குறிப்பிட்டு பாராட்டி பேசிவிட்டு, ஸ்டாலினை மகனாக பெற்றது தன்னுடைய தவப்பயன் என்று சொன்னார்.

உண்மையிலேயே, இந்த வயதில் பணியாற்றும் அவரை எனது தந்தையாகவும், இந்த பேரியக்கத்தின் தலைவராகவும் பெற்றது என்னுடைய தவப்பயன். அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட தலைவரை பெற்றது தமிழகத்தின் தவப்பயன். உங்களிடம் நான் வெறும் வாக்கு கேட்க வரவில்லை. ஏனென்றால், நீங்கள் தலைவரை 200 சதவீதம் உறுதியாக வெற்றி பெற செய்வீர்கள். நான் ஒரு வேண்டுகோளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.

தேர்தல் களத்தில் வெற்றி என்பதை தவிர வேறெதுவும் அறியாத தலைவர் தற்போது 13-வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் திருவாரூரில் போட்டியிட்டபோது, அதுவரை அவர் பெற்றிராத மகத்தான வெற்றி இலக்காக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தீர்கள். இந்த முறை இரு மடங்கு அதிகளவில் தமிழக அளவில், இந்திய அளவில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தில் தலைவரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, அவருக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். இனி வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் தலைவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.