March 27, 2023

பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடர்ந்தார் எம்.ஜே.அக்பர்!

நாடெங்கும் ஹாட் டாபிக் ஆகி உள்ள மீடு மூலம் தன்  மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகை யாளர் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பருக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அக்பருக்கு எதிராக மீடூ ஹேஷ்டேக் மூலம் முதன் முதலில் பத்திரிகையாளர் பிரியா ரமணி குற்றச் சாட்டு களை முன்வைத்தார். அவரை தொடர்ந்து பலரும் அக்பர் மீது புகார் கூறினர். இதையடுத்து, தனது பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், தனது பதவியை ராஜிநாமா செய்ய மறுத்துள்ள அக்பர், பாலியல் புகார் தொடர்பாக நேற்று விளக்கமளித்தார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் திரிக்கப்பட்டு உள்ளவை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்பர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன் மீது முதன் முதலில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிரியா ரமணி மீது அக்பர் இன்று (அக்டோபர் 15) மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500இன் கீழ் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.