கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

றைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன், தமிழக சட்டமன்றத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். மேலும், எம்.ஜி.ஆரால் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது 85 வயதாக கவிஞர் புலமைப்பித்தன், கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1935-ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைப்பித்தன், 1964-ம் ஆண்டு திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சென்னை சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய அவர், குடியிருந்த கோயில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார். அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து வருகிறது. எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்று வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். அ.தி.மு.க.வின் அவைத்தலைவராகவும் பதவி வகித்த புலமைப்பித்தன், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற ஆயிரம் நிலவே வா பாடலையும் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். இதனை பாடியதன் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்திலும் பாடல்களை எழுதியுள்ள புலமைப்பித்தன், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற வளைகாப்பு பாடலான தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடலையும் இயற்றியுள்ளார்.

error: Content is protected !!