October 19, 2021

உப்பு குறைச்சலா உபயோகிச்சா மாரடைப்பு ஆபத்து: கனடா பல்கலை. எச்சரிக்கை

உப்பில்லா பண்டம் சாப்பிடும் ஜனங்கள் அதிகமாகி விட்டா இந்நாளில் உப்பு என்றால் தெரியுமா? என்று கேட்டால், ‘உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு’ என்று சிம்பிளாக பதில் சொல்லி விடலாம். அது பாதிதான் சரியான பதில். உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை. ‘அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு’ என்று வகைப்படுத்துகிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள். இந்நிலையில் உப்பை தொடர்ந்து குறைவாக உட்கொண்டு வந்தால் மாரடைப்புக்கான ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

salt mar 10

கடந்த ஆண்டு உப்பு பயன்பாடு பற்றி  ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, ஒரு மனிதன் சராசரியாக நாள்தோறும் 9.2 கிராம் உப்பை பயன்படுத்துவதாகவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த உப்பை குறைத்து ஒருவர் 5 கிராம் உப்பை உட்கொள்வதன் மூலம் ரத்த கொதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து எளிதாகத் தப்பிக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.

அது மட்டுமின்றி உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்வது உடல் நலனுக்கு தீங்கானது என காலம்காலமாக கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக ஒவ்வொருவரும் தற்போது எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை அதிகரிப்பது அவசியம் என்று கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தலைமையி லான இந்த ஆய்வாளர்கள், “நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவை, உடல் நலனுக்கான வழிகாட்டு நெறிகள் குறைவாகவே பரிந்துரை செய்துள்ளன. இதனால் மாரடைப்புக்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பெரியவர்கள் தினமும் 5 கிராமுக்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதுபோதுமானதல்ல என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இதுகுறித்து மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் சலீம் யூசுஃப் கூறும்போது, “உப்பை குறைவாக எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் தீங்கு ஏற்படவே வாய்ப்புள்ளது. ஒருவர் 3 கிராமுக்கு குறைவாக சோடியம் உட்கொள்வதால் அவருக்கு மாரடைப்பு, இதயக் கோளாறு மற்றும் மரணத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. உப்பின் அளவை மிகவும் குறைத்தால், உடலின் இயற்கைச் சமநிலை பாதிக்கும்” என்றார்.

இவர்களின் விரிவான ஆய்வு முடிவுகள் சர்வதேச மருத்துவ இதழ் ஒன்றில் (European Heart Journal) வெளியாகியுள்ளது. “தினமும் 2.3 கிராம் வீதம் சோடியத்தை நீண்ட காலத்துக்கு எடுத்துக்கொள்வது சரியல்ல. இதனால் பலன் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனால் உடல்நலனுக்கு தீங்குதான் ஏற்படும்” என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சலீம் யூசூஃப் கூறும்போது, “பெரியவர்கள் தினமும் 7.5 கிராம் முதல் 12.5 கிராம் வரை உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இது 3 முதல் 5 கிராம் வரையிலான சோடியத்துக்கு இணையானது ஆகும்” என்றார்.

இந்நிலையில் இந்த உப்புகளில் ஏராளமான வகைகள் இருக்கிறது என்பதும் உப்பு பற்றிய சில சுவையான தகவல்களும் உங்களுக்காக .

* நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும்.

* மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான். 3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஓவியத்தில் உப்பு தயாரிக்கும் முறை சான்றாக கிடைத்துள்ளது. சகாரா பாலைவனத்தில் உப்பு படிவுகளை அவர்கள் வெட்டி எடுத்து வணிகம் செய்துள்ளார்கள்.

* இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன் படுத்தியவர்களும் எகிப்தியர்களே. சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் ஆகிய 4 உப்புக்களின் கலவை ‘நார்டான்’ எனப்படுகிறது. இதைக் கொண்டுதான் அவர்கள் ‘மம்மி’க்களை பாதுகாத்தனர்.

* பழங்காலத்தில் மத்திய ஆப்பிரிக்க பகுதிகளில் 10 அங்குல நீளமும், இரண்டு அங்குல தடிமனும் கொண்ட உப்புக் கட்டிகளை நாணயங்களாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

* இந்தியாவில் பழங்காலத்தில் 5 வகை உப்புக்களை தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். சமுத்ரா எனப்படும் கடல் உப்பு, மண்ணில் இருந்து எடுக்கப்படும் உத்பேஜா, உறைந்து படிவங்களாக கிடைக்கும் ரோமகா உப்பு, அவுத்பிதா மற்றும் சைந்தவா ஆகிய உப்பு வகை சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.