March 22, 2023

அன்பே சிவம்! ஆம் அன்புக்குண்டோ அடைக்குந்தாள்!

ந்தியாவிற்கு எதிரான ஒரு மனப்பான்மையை பாலிவுட் முதல் கோலிவுட் வரை அரங்கேற்றியது. அதற்கு நாட்டுக்கு எதிரான சக்திகள் திரியாக இருந்தாலும் அதற்கு எண்ணெயாய் இருந்தது மதமும், எரிய தூண்டிய ஆகிஸ்ஜனாய் இருந்தது கம்யூனிச, திராவிடம் போன்ற அரசியல் ஊற்றுக்களே! ஒன்றுக்கொன்று இருந்த மோசமான உறவுகளுக்கு பணமும் பதவியும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. தன்னை மீறி யாரும் தலை தூக்கிவிட முடியாது என்ற தலைக்கனத்தை கொடுத்து கெடுத்தது. ஆனால் தர்மன் கூறுப்படி, அடுத்த நொடியில் கூட மரணம் நம்மை தழுவலாம் என்ற உண்மையை ஹைப்போதாலமஸ் ஏனோ மூடி மறைத்தது. மரணம் என்ற ஒன்று மனதில் தோன்றாததன் விளைவு, பாலிவுட்டின் கடவுள்கள் என்று நம்பியவர்களின் படங்கள் தோல்வி இன்று ஒரு பாடத்தை புகட்டியுள்ளது. ஒன்று இரண்டல்ல, 25 படங்கள் தொடர் தோல்வி. இதற்காக ரசிகர்களின் மீது நீ கோபப்பட்டால், வெறுப்பை உமிழ்ந்தால், இதுவரை உன் பின்னால் கண்மூடித்தனமாக உனை தொடர்ந்த மடத்தனத்துக்கும் அது பொருந்தும்தானே!

ஒவ்வொருவருக்கும் ஒர் நம்பிக்கை இருக்கும், இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை நற்செயலை ஊக்குவிக்க வேண்டும். ஒரு நல்ல சமுதாயத்தை உற்சாகபடுத்த வேண்டும், ஆனால் இன்று உலகை ஆளும் நம்பிக்கைகள் என்ன? அவை மனிதனின் மனதுக்குள் புகுத்தும் மோசமான வெ(ற்)றிகள் என்ன? அது சமுதாயத்திற்கு கொ(கெ)டுக்கும் ஊக்கம் என்ன? அது தான் என்ற ஒரு சைக்கோத்தனமான வெறியை வெற்றி என்ற பெயரில் ஆழமாக விதைக்கிறது, இல்லை ஏற்கனவே விதைத்துவிட்டது.

அதனால் வந்த சுய ஒழுக்கம் துறந்த மனித வாழ்க்கையில் பல வகைகளில் கண்கூடாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில், அவ்வப்போது உறுதி எடுக்கும் பாடங்கள் இன்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அது தனி மனித ஒழுக்கத்தின் சான்றுகளாகிறது? நான் நிறுவனத்தின் பொருட்களை திருடமாட்டேன், திருடுபவர்களை அடையாளப்படுத்துவேன், என்னோடு வேலை செய்யும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டேன்! என் நிறுவனத்தை நம்பி வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரகசியத்தை பேணி காப்பேன் என்று முடிவில்லாமல் புதிது புதிதாக தொடர்கிறது.அந்த உறுதி மொழி பத்திரத்தில் நான் இதை செய்யவில்லை என்றால் நான் வேலை இழப்பேன், ஜெயிலில் அடைக்கப்படுவேன் என்பது போன்ற பணிய வைக்க செய்யும் மிரட்டல்கள். ஆனால் அவையெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ஆம், என் சமுதாயம் மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது என்று என்னை ஒழுக்கம் உயரத்தில் வளர்த்தது. உய்வில்லை செய் நன்றி கொண்டார்க்கு என்று எனக்குள் ஊட்டி வளர்த்தது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் என்று தவறை நினைக்கக்கூட செய்வது தவறென்னு தட்டி வளர்த்தது. அதையெல்லாம் என்னுள் வைத்துகொண்டு, இது போன்ற உறுதிமொழிகளை மேற்குலகில் கட்டாயத்திற்காக நாம் செய்யும்போது, இந்த உலகம் எவ்வளவு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று ஆழமாக புரிகிறது. இதை நமக்கு ஊட்டி வளர்த்த கல்வியும், சமுதாயமும் இன்று நம்மிடம் இல்லை. ஒழுக்கத்தை வளர்த்த கல்வி இன்று வெற்றி என்ற வடிவில் வெறியை ஆழமாக புகுத்துகிறது. விளைவு ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்ற உயர்வுக்கு ஓய்வு கொடுத்தாகி விட்டது.

இதற்கு மேற்குலகத்தின் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் வளர்ந்த நம்பிக்கைகள் ஏற்படுத்திய மோசமான சமுதாய பார்வை காரணமல்ல என்று அவர்களால் மறுக்க முடியாது. அதற்கு நேர்மாறாக வளர்ந்து நிற்கும் மத்திய கிழக்கின் வெறித்தனமான நம்பிக்கையின் ஆபத்து என்றும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் நம்பிக்கையில் தவறில்லை. உங்களை மதம் மாறுங்கள் என்று சொல்லவில்லை, அதில் கொஞ்சம் சனாதன தர்மத்தின் வேதங்கள் போதித்த ஒழுக்கத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வள்ளுவன் போதித்த நியாத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் நம்பிக்கையை காயப்படுத்தி. கட்டுப்படுத்தும் காட்டு மிராண்டி தனத்தை ஒழித்து விடுங்கள். ஆதாயத்தோடு மட்டும் பார்க்கும் அறிவை துறந்துவிட்டு அன்போடு சக மந்துதத்தை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் பாவிக்கும் உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளுமங்கள்.

அதை செய்துவிட்டால் உலகம் அமைதியின் நிழலில் ஆசுவாசப்படும். செய்யாவிட்டால், இன்று எல்லா நம்பிக்கைகளையும் ம் சமமாக பார்க்கும், சமாதன தர்மம் கூட, மற்ற நம்பிக்கையை வெறுக்கும் கலாச்சாரமாகி மாறிக்கொண்டிருக்கிதது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும், பலமும், நலமும், பணமும், பதவியும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற அரக்க்தனமும் புகுந்துவிட்டது.

அது முழுவதுமாகி அதுவே வாழ்க்கை என்றாகிவிட்டால், நேற்று உங்களுக்கு இருந்த சக்தியும், பொருளும் நாளை உனக்கு எதிரானவர்களிடமும் போய்விடும் சாத்தியம் உண்டு. அப்போது புலம்பி, வருந்தி ஆவது என்ன? ஆம் எம்மதமும் சம்மதமே என்றிருந்த இந்து மதமும், என் மதம் மட்டுமே சம்மதம் என்று மாறிவிட்டால், விளைவுகள் விபரீதமாகிவிடும்! அதற்கு வினை விதைத்தவன், தினையா அறுப்பான்? ஆம், கான முயலெய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற ஒழுக்கத்தை உய்விப்போம், இல்லாவிட்டால் சாத்தானின் வேதம் உயிர்த்துவிடும், உலகை உரித்துவிடும். இது வெறும் மனிதனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிருக்கும், காற்று, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களுக்கும் பொருந்தும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மரு. தெய்வசிகாமணி