ராமர் நேபாளி நாட்டின் இளவரசர்!.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு!!

ராமர் நேபாளி நாட்டின் இளவரசர்!.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு!!

மோடியின் பாஜக அரசுக்கு வித்திட்ட அயோத்தி உன்மையில் நேபாளத்தில் இருப்பதாகவும் கடவுள் ராமர் இந்தியரே அல்ல, அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த கவிஞர் பானுபகத்தாவின் பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை தன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, கலாச்சார ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நேபாளமும் ஒன்று எனக் கூறினார். மேலும் தங்களது நாட்டின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

‘‘இந்திய இளவரசன் ராமருக்கு நாம் சீதையைக் கொடுத்ததாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அயோத்தியைச் சேர்ந்த இளவரசனுக்குதான் சீதையை கொடுத்தோமே தவிர, இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. உண்மையில் அயோத்தி என்பது பிற்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் தோரி என்ற சிறிய கிராமம். இந்தியாவில் உள்ள அயோத்தி ராமரின் பிறப்பிடம் அல்ல’’

‘‘ராமாயணத்தை எழுதிய வால்மிகியின் ஆசிரமம் கூட நேபாளத்தில் தான் இருந்தது. நேபாளத்தில் உள்ள ரிதி என்ற இடத்தில் தான் தனக்கு மகன் பிறக்க வேண்டும் என தசரத சக்ரவர்த்தி வேள்வி நடத்தினார்” என்று சர்மா ஒலி கூறியுள்ளார்.

மேலும் இந்திய தூதரகம் தொடர்ந்து தனக்கு எதிராக செயல்படுவதாகவும் தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள், காத்மாண்டு உட்பட நேபாளத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறுவதாகவும் ஷர்மா ஒலி குற்றம்சாட்டியுள்ளார்.

https://twitter.com/aanthaireporter/status/1282700568226459648

பாஜக கண்டனம்

ராமர் தொடர்பான சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிரதமர் சர்மா ஒலிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டில்லியில் நேற்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிஜய் சோன்கர் சாஸ்திரி செய்தியாளர்களிடம் பேசுகையில் :இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளும் இந்திய மக்களின் நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்கள். அவர்களை இந்திய மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதேபோல் நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளையும் அந்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள்.

ஸ்ரீ ராமர் விவகாரம் எங்கள் நம்பிக்கை சார்ந்தது. நேபாளத்தின் பிரதமராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் இந்த விஷயத்தில் விளையாடுவதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என பிஜய் சோன்கர் சாஸ்திரி கூறினார்.

error: Content is protected !!