தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செஞ்சுப்புட்டாய்ங்க! – AanthaiReporter.Com

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செஞ்சுப்புட்டாய்ங்க!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதா விற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையிலும் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் மாநிலங்களவையில் பாஜக வுக்கு பெரும்பான்மையான எண்ணிக்கை இல்லாததால் அங்கு இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் கடந்த 2005ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் அரசாங்கம், அரசு துறைகள், சட்டம், வங்கித்துறை ஆகியவை தொடர்பான எந்த கேள்வி களுக்கும் பொதுமக்கள் தகவல் உரிமை ஆணையத்தின் வழியாக பதில்களை பெறலாம். இந் நிலையில் ஜூலை 19ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் (திருத்த) மசோதா 2019 என்ற மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி தகவல் கமிஷன் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையருக்கு இணையாக உள்ள தகவல் கமிஷன் தலைமை ஆணையரின் அந்தஸ்து பறிக்கப்படும். அதேபோல் மாநிலத்தின் தலைமை செயலாளருக்கு சமமாக உள்ள மாநில தகவல் கமிஷன் ஆணையர்களின் அந்தஸ்தும் குறையும்.

இந்த மசோதா மூலம் தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை தகவல் கமிஷனின் வெளிப்படைத் தன்மையை சீர்குலைக்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்யும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் சாடினர்.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா மீது இன்று நடந்த மக்களவையில் விவாதம் நடந்தது . அப்போது எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய பணியாளர்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆர்.டி.ஐ சட்டம் மக்களுக்கு எளிதாக சென்று சேர்வதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என கூறினார்.

தகவல் கமிஷன்களின் வெளிப்படைத் தன்மைக்கும் சுயேட்சை அதிகாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒருபோதும் செயல்படாது என ஜிதேந்திர சிங் உறுதி அளித்தார். மசோதா மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த பகுஜன் சமாஜன், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர்.

அவர்கள் கோரிக்கை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 79 வாக்குகள் மட்டுமே ஆதரவாக கிடைத்தது. அதனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் பின் மசோதா தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் கேட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இறுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது.