இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – திமுக கடும் எதிர்ப்பு!

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – திமுக கடும் எதிர்ப்பு!

நம் நாட்டின் முக்கிய நகரங்களில் இ-சிகரெட்டுகள் பலமடங்கு விற்பனையாகிவந்த நிலையில், இந்தியா முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.இதைதொடர்ந்து, இ-சிகரெட் தடை தொடர்பான அவசர சட்டத்தை 18-9-2019 அன்று மத்திய அரசு பிறப்பித்தது. இதை சட்டவடிவமாக மாற்றுவதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பின்னர் இன்று நிறைவேற்றப்பட்டது.

சீனாவை சேர்ந்த ஹான் லிக் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு Electronic Nicotine Delivery Systems (ENDS) எனப்படும் இ-சிகரெட்டை கண்டுபிடித்தார்.பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியான இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.

சிகரெட் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால் ஏற்படும் விசையால், பேட்டரி இயங்கும். அப்போது, நிகோடின் சூடேறி, புகை கிளம்பும். புகைப்பவர் இதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டைப் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும். இதில், நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால், இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர். இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது.மேலும், ‘இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது. நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக் கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால், ‘இ-சிகரெட் விளம்பரம் உண்மையல்ல. உடலில் புற்றுநோயை உண்டாக்க நிகோடின் ஒன்றே போதும்.

இ-சிகரெட் புகைத்து ஒருவர், சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் என்பதற்கான அறிவியல் ஆதாரமோ, மருத்துவப் புள்ளி விபரங்களோ எதுவுமில்லை’ என்கின்றனர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.நிகோடின் எந்த வகையில் உடலுக்குள் நுழைந்தாலும் ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், ரத்தநாள நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இ-சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. இதை அடுத்தே மோடி அரசு இந்நடவடிக்கையை எடுத்தது.

இதனிடையே ஈ-சிகரெட்டுகள் மீது அவசரச் சட்டம் இயற்ற வேண்டிய தேவை என்ன? என மத்திய அரசிடம் திமுக சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதை, அதன் மீதான மசோதாவில் அக்கட்சியின் தருமபுரி தொகுதி எம்.பி.யான டாக்டர் செந்தில்குமார் இன்று பேசியபோது எழுப்பினார்.

இது குறித்து டாக்டர் செந்தில்குமார் பேசிய போது, ”இ-சிகரெட் மீதான அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. அதற்கு சற்று முன்பாக ஆகஸ்ட் மாதத்தில் நாடாளு மன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த சூழலில் அந்த அவசர மசோதாவைக் கொண்டு வரவேண்டிய அவசரம் என்ன? என்னவெல்லாம் அவசரச் சட்டத்தில் கொண்டு வரமுடியும்? அவசரமான சூழ்நிலைகளில் தேவைப்படக்கூடிய நடவடிக்கைகளுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். 0.02 சதவிகிதம் உள்ள ஈ-சிகரெட் தான் இந்த நாடு முழுவதும் முக்கியமாக அவசர மாகக் கொண்டு வரவேண்டிய அவசரச் சட்டமா? பலவிதமான அவசரமான சூழ்நிலைகள் இருக்கின்றன. அவற்றின் மீதும் நடவடிக்கை தேவைப்படுகின்றது.

உதாரணமாக, வறுமையை ஒழிப்பது, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சமூகசமத்துவம் மற்றும் நீதி ஆகியவை இ-சிகரெட் அவசரச் சட்டத்தை விட மிகவும் முக்கியமானவையாகும்.இதன் பின்னணியில் புகையிலை சிகரெட் நிறுவனங்களின் அழுத்தம் உள்ளதா என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. இ-சிகரெட் என்றால் என்ன? ஈ-சிகரெட் என்பது பேட்டரியால் இயங்கக்கூடியதும், உள்இழுக்கும் போது நீராவியான நிகோடினை வெளியிடக்கூடியதும் ஆகும்.

ஆகவே புகையில்லாமல் புகையிலையை உள்ளிழுப்பதாகும். இ-சிகரெட்டுகள் என்பது புகையிலை சிகரெட்டுகளைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதனை, பிப்ரவரி 18, 2018 தேதியிட்ட பிரிட்டனின் மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில், 95 சதவீத இ-சிகரெட்கள், பாரம் பரிய புகைப்பிடிக்கும் முறையை விட மிகவும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலநாடுகளில் ஈ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டன.

ஆனால் இது பாரம்பரிய புகை பிடிக்கும் முறையை விட மிகவும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று கூறப்பட்டு அந்தத் தடைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு மருத்துவராக ஹர்ஷவர்த்தனுக்குத் தெரிந்திருக்கும். இ-சிகரெட்டுகள், புகையிலை சிகரெட்டுகள் இரண்டும் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், நீங்கள் ஏன் ஒன்றை மட்டும் குறிவைக்கின்றீர்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள குறிக்கோள் மற்றும் காரணங்களின்படி, சர்வதேச நுரையீரல் புற்றுநோயை ஆராயக்கூடிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-சிகரெட்டுகள் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கவில்லை.

நான் கேட்பது என்னவென்றால் சர்வதேச நுரையீரல் புற்றுநோயை ஆராயக்கூடிய கூட்டமைப்பு புகையிலை சார்ந்த சிகரெட்டுகள் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கின்றதா, இல்லை. பின்னர் ஏன் அறிவியல் ஆதாரங்களை வெட்டி எடுத்து ஒட்டி அரசாங்கத்திற்குப் பயன்படுவது போல் செய்கின்றீர்கள்.

அறிவியல்ஆதாரம் சார்ந்த தரவுகளை முன்வைக்கும்போது, முழுவதையும் முன்வைக்க வேண்டும். பிராண்டிங், விற்பனை உள்ளிட்டவற்றுக்காக புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்கள் சட்டம் உள்ளது. 100 சதவிகிதம் இ- சிகரெட்டுகளைத் தடை செய்வதற்கு முன்னால், ஈ-சிகரெட்டுகளை முறைப்படுத்தும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். நீங்கள் உண்மை யிலேயே அக்கறை கொள்பவர்களாக இருந்தீர்கள் என்றால், அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தால் நீங்கள் அனைத்துவிதமான புகையிலைப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும்.

சில உறுப்பினர்கள் சொன்னது போல, சில விவசாயிகள் புகையிலையைப் பயிரிடுகின்றார்கள். நாம் அவர்களுக்கு மாற்று ஒன்றைக் கொடுக்கலாம். உங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால், இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டாம். தமிழ்நாட்டில் குட்கா தொடர்பான பொருட்களுக்குத் தடை உள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இங்கே அமைச்சர் உள்ளார், அவர் மீது மரியாதை உள்ளது. எனவே குட்கா ஊழல் தொடர்பான விசாரணையில் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகின்றோம் இந்த அரசாங்கத்தின் கோஷங்களில் ஒன்றான அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி என்ற எண்ணம் மீது சந்தேகத்தின் நிழல் படிகின்றது.

நீங்கள் அனைவருக்கும் கெடுதல் இல்லை என்ற எண்ணத்தை நிலைநாட்ட விரும்பினால், இ- சிகரெட்டைத் தடை செய்ததைப் போலவே, அனைத்து புகையிலை சார்ந்த பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று எங்களின் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்”. என்று டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!