பார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்?

பார்லிமெண்ட் தேர்தல் பல கட்டங்களாக நம் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2 ஆம் கட்டமாக தமிழகம் உள்பட சில மாநிலங்களில் வரும் 18ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடை பெற இருக்கிறது. இந்நிலையில், மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (Association For Democratic Reforms – ADR) தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர் களில், 802 வேட்பாளர்களைக் குறித்து நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் மூலம், தமிழகத்தில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர் கள், எத்தனை பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன என்பது போன்ற விபரங்கள் தெரிய வந்துள்ளன.

Association of Democratic reforms (ADR) வெளியிட்டுள்ள ஆய்வின் படி, 184 கோடீஸ்வர வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அதாவது மொத்த தமிழக வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் 76 பேர் சுயேட்சைகள், மற்றவர்கள் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இந்த கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அவருக்கு அடுத்த இடத்தில், அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 237 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் உள்ளார். மூன்றாமிடத்தில் 126 கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஏசி சண்முகம் உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு மத்தியில் சொத்துக்களே இல்லாத ஏழை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இம்முறை 16 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்து என ஏதும் இல்லை என தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். இதேபோல், 3 வேட்பாளர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சொத்துக்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், இந்த ஆய்வு முடிவானது 67 தமிழக வேட்பாளர்கள் மீது அதிகளவிலான கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.அதில், 14 வழக்குகளுடன் ஈரோட்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். அவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மொத்தத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 8 சதவீதம் பேர் மீது கடுமையான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

மேலும், இந்த ஆய்வு மூலம் மொத்தமுள்ள தமிழக வேட்பாளர்களில் 80 சதவிகிதம் பேர் பட்டதாரி கள், 8 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் 38 சதவிகிதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. அதோடு, சுமார் 140 வேட்பாளர்கள் தங்களது பான் கார்டு எண்ணை தங்களது வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்ற தகவலும் இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மேலும், இந்த ஆய்வு முடிவுகள் பற்றி விரிவாக இந்த லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

https://adrindia.org/content/lok-sabha-elections-2019-phase-ii-analysis-criminal-background-financial-education-gender

இதனிடையே அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவில் உண்மையான சொத்து விபரங்களைத் தான் கூறியிருக்கின்றனரா என்பதும் சந்தேகமே. ஏனெனில், இவை அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது அளிக்கும் சொத்து விபரங்கள் மட்டுமே.

சமீபத்தில் பெரம்பூரில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த நெல்லை ஜெபமணியின் மகன், ‘தனக்கு ரூ. 1 லட்சத்து 76000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக ’வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர், ‘தான் வேண்டுமென்றே தவறான தகவலை அளித்ததாக’ அவர் பேட்டி அளித்த காமெடியும் நடந்தது நினைவிருக்கலாம்.

ஆக.,நமது வேட்பாளர்களை நாம் தெரிந்துக்கொள்வது குடிமக்களாகிய நமக்கு கடமை.

நம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி அறிவோம். தகுதியானவரை தேர்ந்தெடுக்க கண்டிப்பாக வாக்களிப்போம்