அறிவிச்சாச்சு: பார்லிமெண்ட் + தமிழக இடைத்தேர்தல் = ஏப்ரல் 18ல் நடைபெறும்!

நாட்டு மக்களில் பலர் எதிர்பார்த்திருந்த பார்லிமெண்ட் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடை பெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். அத்துடன் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 18 ம் தேதி 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். அதே சமயம் மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டின் 18 சட்டமன்ற தொகுதி களுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 17வது மக்களவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இத்தேர்தலுக்கு 543 தொகுதிகளிலும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கபட இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2004ல் நடந்த மக்களவைக்கு 4 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பை 2004ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2009ல் நடந்த மக்களவைக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை 2009ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதே போல், 2014ம் ஆண்டில் மக்களவைக்கு 9 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந் நிலையில், இந்த மக்களவை தேர்தலுக்கான தேதி வெளியிட தாமதமாவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில், உரிய நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகை யாளர்கள் சந்திப்புக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

இதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டிளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் , தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் பேசி தேர்தலை சுமுகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம்; அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் இந்ததேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள் என்றார். 23 மாநிலங்களில் 100 சதவிகித வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும் என்றார்.

வாக்குச்சாவடி சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது, தேர்தல் ஆணையம் அளிக்கும் பூத் சிலிப் பயன்படுத்தி வாக்கு அளிக்க முடியும் என்றார். அனைத்து கட்டத்திலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் என்றார். சி-விஜில் அப் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், 1950 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், புகார் தெரிவித்த 100 மணி நேரத்தில் புகார் குறித்து அறிக்கை அளிக்கப்படும் என்றார். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது. அனைத்து மாநிலங்களிலும் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

மேலும் 17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றார். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறும் என்றார். 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18, 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 , 4-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29, 5-ம் கட்ட தேர்தல் மே 6, 6-ம் கட்ட தேர்தல் மே 12, 7-ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்றார். மார்ச் 19-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி வேட்புமனு பரிசலீனை செய்யப்படும் என்று அறிவித்தார். மனுக்களை திரும்ப பெற மார்ச் 29ம் தேதி கடைசி நாள், தமிழகத்தில் மே-23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

அடிசினல் ரிப்போர்ட்:

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் குறித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னையில் விளக்கிய போது, “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அதன் பிறகே அங்கு தேர்தல் நடைபெறும்.

மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.