முதற்கட்ட வாக்குப்பதிவு : சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவு! முழு ரிப்போர்ட்!

நம் நாடு முழுவதிலுமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், இன்று தொடங்கி அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வகையில், ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவின் 17 தொகுதிகள், உத்திரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிலும், அசாம் மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகளிலும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காஷ்மீர், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது. சத்தீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி மட்டுமே உள்ள நிலையில், அங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவ்வாறு, ஆயிரத்து 279 வேட்பாளர்களுடன் முதற்கட்ட தேர்தல் எதிர்கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளில், வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு சில தொகுதிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிவுற்றது.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர், முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் முக்கியமானவர்கள் ஆவர். உத்தரப்பிரதேசத்தில் பாக்பட் (Baghpat) தொகுதியில் மேள தாளங்கள் முழங்க, மலர்தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

உத்தரகாண்டில் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டேராடூனில் வாக்களித்தார். தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் நிசாமாபாத் தொகுதியில் வாக்களித்தனர். நாக்பூர் மக்களவை தொகுதியில் RSS தலைவர் மோகன் பகவத் வாக்குப்பதிவு செய்தார். நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் BJP வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி எண் 220-ல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பொதுவாக 20 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிதாக வாக்குரிமை பெற்றுள்ள இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. அதே சமயம் ஆந்திரா வில் பல இடங்களில் மின்னணு ஓட்டு எந்திரங்களில் பழுதாகி பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த எந்திரங்களை சரிசெய்து மீண்டும் வாக்குப்பதிவு நடத்துகிற வரையில் வாக்காளர்கள் பெரும்பாலும் பொறுமையாக காத்திருந்தனர். சில இடங்களில் வாக்காளர்கள் கொந்தளித்தனர். அதிருப்தி அடைந்த பலர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

குண்டக்கல்லில் தங்கள் கட்சி சின்னம் சரியாக அச்சிடப்படவில்லை என்று கூறி பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, மின்னணு வாக்கு எந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்தார். வாக்கு பதிவு அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதன் காரணமாக அவர் உடனே கைது செய்யப்பட்டார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, குடும்பத்தினருடன் வந்து அமராவதி பகுதியில் உண்ட வள்ளி கிராமத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ் போட்டியிடும் மங்களகிரி தொகுதியில் இது அடங்கியதாகும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்துலாவிலும், ஜனசேனா தலைவர் நடிகர் பவன்கல்யாண் விஜயவாடாவிலும் வாக்குப்பதிவு செய்தனர்.

இங்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி ஓட்டு பதிவு செய்தபோது ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘வி.வி.பாட்’ எந்திரம் பழுதாகி, வேலை செய்யவில்லை.அனந்தப்பூரில் நடந்த மோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் சித்தபாஸ்கர் ரெட்டி என்பவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர் புல்லாரெட்டி என்பவரும் உயிரிழந்தனர். அதன்பின்னர் அங்கு கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. இதே போல் சித்தூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த மாநிலத்தில் 362 மின்னணு வாக்கு எந்திரங்கள் செயல்படவில்லை என புகார்கள் எழுந்தன.

ஆந்திராவில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுது பிரச்சினையால் 150 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். இந்த மாநிலத்தில் 20 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டசபை சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தாக்கப்பட்டார். 6 முறை தேர்தலில் போட்டி யிட்டிருந்தாலும், இப்படி ஒரு தேர்தலை நான் சந்தித்தது இல்லை என்று அவர் வேதனையுடன் கூறினார்.

மராட்டிய மாநிலத்திலும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் சரியில்லை, பழுதுபட்டவை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு 39 புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. தெலுங்கானா வில் நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ஓட்டுப்பதிவு 4 மணிக்கு முடிந்தது. பிற இடங் களில் 5 மணிக்கு முடிந்தது. 185 வேட்பாளர் கள் போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதியில் 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. பொதுவாக இந்த மாநிலத்தில் வன்முறை ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக இருந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளிலுமே வாக்காளர்கள் திரண்டு வந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். பெரும்பாலும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் இல்லை. காஷ்மீரில் ஜம்மு தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வாக்களித்தனர். பாரமுல்லாவில் ஓட்டுப்பதிவு மிதமாக இருந்தது.

மேற்கு வங்காள மாநிலம் கூச்பெஹார், அலிபூர்துவார் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பெருந்திரளாக வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்தனர். 2 தொகுதி களிலும் தலா 81 சதவீத வாக்குகள் பதிவானது. மிசோரமில் உள்ள ஒரே தொகுதியில் மாலை 5 மணி வரை 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதன்பின்னரும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பீகாரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அங்கு 53 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரே தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு புகார் எழுந்தது. இருப்பினும் 66 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்படி இப்படியான சம்பவங்களுடன் முதல் கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில், தமிழகம், புதுவை, கர்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங் களில் 97 நாடாளுமன்ற தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் 18-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரம் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்து.