April 2, 2023

லாக் டவுன் காலத்தில் ஜாமீன் மறுப்பா? -சுப்ரீம் கோர்ட் காட்டம்!

அரசு அறிவித்த லாக் டவுன் உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல. ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் உரிமை உண்டு, அதனை மறுக்கவோ, திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவை அசோக் பூஷன் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு ‘தவறு’ என்று தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரை சேர்ந்த சேட்டு என்பவர் தன் மீதான வழிப்பறி வழக்கில், குற்றவியல் நடை முறைச் சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டாலும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கலாம் எனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை மேற்கோள் காட்டி சிலை திருட்டு வழக்கில் ஜாமீன் கேட்டு காசி என்பவர் அதே கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் கால நீட்டிப்பு உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 167(2) பிரிவுக்கும் பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக சிலை கடத்தல் குற்றவாளியான காசி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், முழு விசாரணையும் முடித்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளனர்.