ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு :தமிழக அரசு அறிவிப்பு

கொரோனாவின் கோர ரூபம் குறையாத காரணத்தால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்க்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களிலும் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் ஊராட்சியிலும், காஞ்சிபுரத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் ஜூலை 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை, முந்தைய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாது என்றும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் இயங்குவதற்கான தடையை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இணைய வழிக் கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள், திரையரங் குகள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் இயங்க தடை விதிக்கபட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளான 5, 12, 19 மற்றும் 26 ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங் களுக்கிடையேயான தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து ஜூலை 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட இ-பாஸ் ஜூலை 5-ம் தேதி வரை வரை செல்லும் என குறிப்பிட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கிராமங்களில் உள்ள பெரியவழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடனும் ஆட்டோக்கள் 2 பயணி களுடனும் இயங்க தமிழக அனுமதி அளித்துள்ளது. சென்னையை தவிர மற்ற இடங்களில் தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 வரை இயங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.