உள்ளாட்சித் தேர்தல் நடத்த சான்ஸ் இப்போதைக்கு இல்லை! – தமிழக அரசு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி,ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் இப்போது இல்லை. மக்களவை தேர்தல் நடந்து முடிந்த உடனே, உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.

அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டிய வேலை நிலுவையில் உள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்னும்பெறவில்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.