March 27, 2023

எல்கேஜி – சினிமா விமர்சனம்!

சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு குறிக்கோளை சொல்லும் நோக்கம் இருந்தது. அதாவது சுதந்திர தாகம், அன்பு மயம், காதல், நையாண்டி என்ற ஏதாவதொரு சப்ஜெக்டைப் பிடித்துக் கொண்டு கதை வசனம் எல்லாம் ரூம் போட்டு யோசித்து உருவாக்குவார்கள். 80 -களுக்கு பிறகு கதை விவாதம் என்பது குறைந்து போனதுடன் மேலே சொன்ன ஒரு குறிகோளை சுட்டிக் காட்டும் போக்கு மறைந்து ஒரே படத்தில் பல சிந்தனைகளை வெளிக்காட்ட முயல ஆரம்பித்து விட்டனர். அந்த குறையை போக்கு விதத்தில் முழுக்க முழுக்க நவீன கால அரசியல் போக்கை கிண்டல் அடிக்கும் பாணியிலான படம்தான் எல். கே.ஜி.

அதாவது ஹீரோ ஆர்ஜே பாலாஜியின் முழுப் பெயரான லால் குடி கருப்பையா காந்தி- என்பதுதன் சுருக்கம்தான் டைட்டில்,அதே சமயம் இன்றைய தலைமுறையினருக்கு இப்போதும் நினைவுக்கு வரும் அமைதிப் படை பாணியிலான படமிது என்று இதேப் பட யூனிட் சொல்லிக் கொண்டாலும் அமைதிப் படை அப்போதைய சம கால நிகழ்களை மட்டுமே கவனத்தில் கொண்டு உருவாக்காமல் அரசியலின் நேற்று இன்று நாளை என்னும் மூன்று பருவ சமாச்சாரங்களையும் அலசி அப்படி, இப்படி,எப்படியோ கலாய்த்திருப்பார்கள். ஆனால் இந்த எல் கே ஜி அம்புட்டு யோசிக்கவில்லை.. யோசிக்கவும் வைக்கவில்லை.

அதாவது வார்டு கவுன்சிலர் ஒருவர் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஆலோசனையுடன் முதல்வர் நாற்காலியில் அமர எத்தனிக்கும் பயணம்தான் எல்கேஜியின் ஒன் லைன் ஸ்டோரி. இதை ரேடியோ ஜாக்கி பாலாஜி பேசி பேசி அதுவும் நரம்புகள் புடைக்க பேசியே இரண்டு ம|ணி நேரத்தை நகர்த்தி விடுகிறார்கள். ஆரம்பத்தில் சொன்னது போல் அரசியல் குறித்தான இப்படத்திற்க்காக ரொம்ப மெனக்கெடாமல் கடந்த ஒரு வருஷ சோஷியல் மீடியாவை ரிவைண்ட் செய்து பார்த்து சினிமா என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு நன்றிக் கடனாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சில சீன்களை வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்!

மேலும் முதல்வர் திடீர் நலக் குறைவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மருத்துவமனையில் வெட்டி யாக செயல்படுவது, துணை முதல்வர் முதல்வர் ஆவது, இடைத்தேர்தல்,டெல்லியுடன் கூட்டு , 20 ரூபாய் கிழிந்த நோட்டுக்கு வாக்கு, ஆற்றில் தெர்மாக்கோல் விடுவது, ஸ்டிக்கர் போன்ற பழைய மீம்ஸ்களை காட்சிகளாக காட்டி இருக்கிறார்கள் இது இன்னும் ஐந்து வருடத்தில் ஜனங்கள் மறந்து விடும் சமாச்சாரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள தவறி விட்டார்கள் . மேலும் அறிமுக நடிகர் நாஞ்சில் சம்பத், ஆர் கே ரித்தீஷ் போன்றவர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆங்காங்கே ஒரு சில காட்சியில் மொக்கை காமெடி புன்னகைய வரவழைக்கிறது. மொத்தத்தில் ஜஸ்ட் ஃபன் படம் தான் என்பதால் ஆழமாக படத்தை ஆராயக்கூடாது. அதே சமயம் ஒரு முழுமை யான கமர்சியல் படம் பார்த்த திருப்தி இந்த படம் அளிக்கவில்லை. அதனால் சின்னத்திரையில் விரைவில் வெளியாகும் போது பார்க்க முடிந்தால் பார்க்கலாம்

மார்க் 2 . 75 / 5