முதலில் நாடு: அடுத்து கட்சி; பின்னரே சொந்த நலன்!- பாஜக-வினருக்கு அத்வானி அட்வைஸ்!

முதலில் நாடு: அடுத்து கட்சி; பின்னரே சொந்த நலன்!- பாஜக-வினருக்கு அத்வானி அட்வைஸ்!

பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் , ‘எனக்கு நாட்டு நலனே முதன்மையானது. நாட்டுக்கு பிறகு கட்சியின் நலன். அதற்கு பிறகே சொந்த நலன் முக்கியம் என எண்ணுகிறேன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்பது பா.ஜ.கவின் கொள்கையல்ல.

குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் என்னை 6 முறை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அத்வானி போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாரதிய ஜனதா கட்சியின் துவக்க தினம் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆகும். இந்த துவக்க தினத்தையோட்டி தனது பிளாக்-க்கில் அறிக்கை ஒன்றை அத்வானி வெளியிட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல் கே அத்வானி தன்னுடைய சொந்த வாழ்க்கையின் விளக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எல் கே அத்வானியின் உருக்கமான அந்த அறிக்கை விவரம் இதோ

பாரதிய ஜனதா கட்சியின் துவக்க தினம் ஏப்ரல் 6ஆம் தேதி ஆகும் இந்த நன்னாளில் கட்சியில் உள்ள அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும், தன்னைப் பற்றி தானே ஆய்வு செய்யவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியை துவக்கியவர்களில் ஒருவர் என்ற வகையில் கட்சியின் துவக்க நாளை ஒட்டி எனக்குள் தோன்றும் சிந்தனைகளை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனது கடமை என்று நான் கருதுகிறேன். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர் களுடன் இந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் கட்சியின் தொண்டர்கள் தங்களது அன்பு மற்றும் மரியாதையால் நான் என்றும் அவர்களுக்கு கடமைப் பட்டவனாக இருக்கச் செய்துவிட்டனர்.

என்னுடைய கருத்துக்களை நான் வெளியிடுவதற்கு முன்னாள் குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதி பொதுமக்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 6 முறை என்னை தங்கள் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். காந்தி நகர் தொகுதி மக்கள் தங்கள் அன்பு மற்றும் ஆதரவில் என்னை மூழ்கடித்துள்ளனர்.

என்னுடைய பதினாறாவது வயதில் நான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தேன். அதுமுதல் தாய் நாட்டுக்கு சேவை செய்வது என்னுடைய இலட்சியமாகவும் ஆர்வமாகவும் அமைந்தது.

என்னுடைய அரசியல் வாழ்க்கை கட்சியுடன் பிரிக்க இயலாத வகையில் எழுபது ஆண்டுகள் அமைந்துள்ளது. முதலில் பாரதிய ஜன சங் அடுத்து பாரதிய ஜனதா கட்சி- இந்த இரண்டு கட்சிகளின் துவக்க உறுப்பினராக நான் இருந்திருக்கிறேன். பெரும் தலைவர்களான தீன தயாள் உபாத்யாயா அடல் பிஹாரி வாஜ்பாயி போன்ற பெருந்தலைவர்களுடன், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாத தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

என்னுடைய வாழ்க்கை முழுக்க எனக்கு வழிகாட்டும் லட்சியமாக தேசத்துக்கு முதலிடம் இரண்டாம் இடம் கட்சிக்கு, சொந்த வாழ்க்கைக்கு மூன்றாம் இடம் என்பதே அமைந்தது.

இந்திய சுதந்திரத்தின் சாராம்சமாக பன்முகத்தன்மையை மதிப்பதும் கருத்துச் சுதந்தரத்துக்கு மதிப்பளிப்பதும் அமைந்துள்ளது. துவக்க காலம் முதல் பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய கொள்கைகளோடு உடன்படாதவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதியதில்லை அவர்களை மாற்று அணியினர் ஆகவே கருதி வந்துள்ளது. அதேபோல இந்திய தேசியத்தை பொருத்தமட்டில் நம்முடன் உடன்பட விரும்பாதவர்களைக்கூட தேச விரோதிகளாக ஒருபோதும் கருதியதில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட முறையிலும் அரசியல் முறையிலும் தனக்கு பிடித்தமான நடைமுறையை தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளது என்பதை பாரதிய ஜனதா கட்சி அங்கீகரித்து வந்துள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும் தேசிய அளவிலும் பாதுகாத்தல் என்பது பாரதிய ஜனதா கட்சியின் பெருமைமிக்க பாதையின் சிறப்பு அடையாளமாக அமைந்துள்ளது. எனவே சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தல், மக்களிடையே ஒருங்கிணைவு, நேர்மை, மற்றும் நன்மைக்காக வலிமையோடு நேர்மையாக போராடுதல் ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருந்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறிப்பாக அரசியலில். தேர்தல் செலவுகளுக்கான முதலீட்டில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அமையவேண்டும். இது ஊழலற்ற அரசியல் முறைக்கு அடித் தளமாகும். இது கட்சியின் மற்றொரு முன்னுரிமை நடவடிக்கையாகும். சுருக்கமாகச் சொன்னால் உண்மை, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பண்பு,கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் ஜனநாயகத் துக்காக உழைத்தல் ஆகிய மூன்று கொள்கைகளும் போராட்டம் நிறைந்த நம்முடைய கட்சியின் பாதையில் நம்முடைய பரிணாம வளர்ச்சிக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.

இந்த கொள்கைகளின் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த சாராம்சமாக தேசிய கலாச்சாரம் நல்ல ஆட்சி ஆகியவை அமைந்துள்ளன, இவற்றுக்கு என்றும் கடமைப் பட்டதாக நம் கட்சி என்றும் அமைந்து இருக்கிறது. நெருக்கடிகால ஆட்சிக்கு எதிராக நம்முடைய கட்சி நடத்திய வீரப்போராட்டம் இந்த கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதற்காகவே அமைந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்திய ஜனநாயக கட்டமைப்பை மேலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பலப்படுத்த பாடுபட வேண்டும் என்பது என்னுடைய உளமார்ந்த விருப்பமாகும்.

ஜனநாயகத்தின் தேர்தல்கள் என்பது உண்மையில் பெரும் விழாக்கள் என்பது உண்மையாகும். ஆனால் அவை இந்திய ஜனநாயகத்திற்கு பொறுப்பாளிகளாக இருக்கிற அனைவரும் குறிப்பாக அரசியல் கட்சிகள் போது பிரச்சார சாதனங்கள், தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் உடையவர் கள் எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளர்கள் அனைவரும் நேர்மையாக தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வதற்கு உரிய சந்தர்ப்பமாகவும் அமைகிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தன்னுடைய தளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் மோடி  “பா.ஜனதா கட்சியின் உண்மையான கருத்தை மிக சரியாக அத்வானி கூறியுள்ளார்” என அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் இச் சூழ்நிலையில் முரளி மனோகர் ஜோஷி நேற்று அத்வானி வீட்டுக்கு வந்தார். இந்த திடீர் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து இரு தரப்பினரும் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

error: Content is protected !!