March 28, 2023

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாட்களில் ராஜினாமா!

பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரிட்டன் நாட்டின் பிரதமருமான லிஸ் டிரஸ், பிரதமர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளார். லிஸ் டிரஸ் ஆட்சியில் முக்கிய மந்திரிகள் இரண்டு பேர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவரும் ராஜினாமா செய்துள்ளார். லிஸ் டிரஸ் கொண்டுவந்த வரி குறைவு பிரிட்டன் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி சந்தையில் தடுமாற்றத்தைக் கொண்டு வந்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரிய அளவில் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

லிஸ் டிரஸ் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பே பொருளாதார நெருக்கடி இருந்த நிலையில் அவர் கொண்டுவந்த வரி குறைப்பு கொள்ளை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. எந்தவித நிதி திட்டமும் இல்லாமல் அவர் கொள்கையை அமல்படுத்தியுள்ளார் என்று அவருக்கு எதிராக முக்கிய மந்திரிகள் போர்க் கொடி தூக்கினர். இதையடுத்து தனது தவறான பொருளாதார முடிவுகளுக்காக அவர் மன்னிப்பு கோரினார்.

அதனை அடுத்து அவர் இன்று கன்சர்வேட்டிவ் கட்சியில் தலைவர் பதவியில் இருந்தும் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மேலும் பிரிட்டன் மன்னருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.