June 30, 2022

ஹிலாரி Vs ட்ரம்ப் = நேருக்கு நேர் விவாதத்தின் சாராம்சம்! வீடியோ

அமெரிக்‍க பிரசிடெண்ட் எலெக்சனில் போட்டியிடும் முக்‍கிய வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்ற முதல் விவாதம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. வழக்கப்படி அமெரிக்‍க பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு, ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம், டிரம்ப்பின் வருமான வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு வேட்பாளர்களும் காரசாரமான கருத்துக்‍களை பரிமாறிக்‍கொண்டனர். விவாதத்தின் முடிவில் நடத்தப்பட்ட கருத்துக்‍கணிப்பில் 67 சதவீத வாக்‍குகள் பெற்று ஹிலரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்‍கப்பட்டது.

hilary sep 27

அமெரிக்‍க அதிபர் தேர்தலுக்‍கு சுமார் 6 வார காலமே உள்ள நிலையில், ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், குடியரசுக்‍ கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் அனல் பறக்‍கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அந்நாட்டு வழக்‍கப்படி, இவ்விருவரும் பங்கேற்ற முதல் விவாதம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணி அளவில் நியூயார்க் நகரின் Long Island என்ற இடத்தில் உள்ள Hofstra பல்கலைக்‍ கழகத்தில் தொடங்கியது. இந்த விவாதத்தில் கலந்துகொள்வதற்காக முதலில் ட்ரம்பும், அவரைத்தொடர்ந்து, அமெரிக்‍க முன்னாள் அதிபரும், தனது கணவருமான பில் கிளிண்டனுடன் ஹிலாரி கிளிண்டனும் வருகை தந்தனர்.

இந்த விவாதத்தில் முதலில் பேச ஆரம்பித்த ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து வேலைகள் ஏன் வெளிநாடுகளுக்கு போனது,
அரசியல்வாதிகள் செயலற்றுப் போய்விட்டார்கள், சிவப்பு நாடா சட்டங்கள் நிறுவனங்களுக்கு எதிரானவை, அதிகப்படியான வரி விதிப்பினால் வெளி நாடுகளுக்கு சென்று விட்டனர், பின்னர் எப்படி வேலைவாய்ப்புகள் பெருகும் என்றெல்லாம் சீரியசாக விவாதத்தை ஆரம்பித்தார். அட, ட்ரம்பின் போக்கில் மாற்றம் தெரிகிறதே, ஹிலரிக்கு கடும் சவால் கொடுப்பார் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்தடுத்து, சரியான புள்ளி விவரங்களுடன் ஹிலாரியை மறுத்துப் பேசாமல், எனக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியிலேயே பதில் அளிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, நிறுவனங்கள் வெளிநாடு இடம்பெயர்தல் உள்ளிட்டவைகளை ட்ரம்ப், ஆவேசத்துடன் பேசி அரசியல்வாதிகளை குற்றம் சாட்டும் போது ஹிலரி சற்று திணறித்தான் போய்விட்டார். இப்போது யோசிக்கும் ஹிலரி 30 வருடமாக என்ன செய்தார் என்றெல்லாம் ட்ரம்ப் பொது மக்களின் தூதுவன் போலப் பேசியபோது, பில் க்ளிண்டன் ஆட்சியில் எல்லாம் சிறப்பாக இருந்தது வேலை வாய்ப்பு பெருகியது என்று பதில் தாக்குதலை ஹிலாரி ஆரம்பித்தார். ஆனாலும் அணுகுமுறையில் தேர்ந்த அரசியல்வாதியின் நிதானத்தைக் கடைப்பிடித்தார்.

ஒபாமாவின் பிறப்பைப் பற்றி சர்ச்சை எழுப்பியே ட்ரம்ப் தனது இருப்பை அரசியலில் தெரியப்படுத்திக் கொண்டார். ஆனால் நாட்டுக்கு பெரும் அவமானத்தைத் தேடித்தந்தார் என்று ஹிலரி குற்றம் சாட்டினார். ஒபாமாவின் பிறப்பு பற்றி ஹிலாரி தான் அவரது உட்கட்சி தேர்தலில் முதலில் எழுப்பினார். அவரால் ஒபாமாவின் பிறப்புச் சான்றிதழை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. நான் அதில் வெற்றி பெற்றேன் என்று ட்ரம்ப் பதிலளித்தார்.உடனடியாக ட்ரம்பின் குற்றச்சாட்டை ஹிலரி மறுத்தார். தான் எப்போதும் ஒபாமாவின் அமெரிக்க பிறப்புக் குடியுரிமை மீது சந்தேகம் கொண்டதே கிடையாது. அவர் முஸ்லீம் என்றும் நான் நம்பியது இல்லை என்றார்.

கடந்த நாற்பது ஆண்டுகால வரலாற்றில், வருமான வரி விவரங்களை வெளியிடாத ஒரே அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தான். அவர் வருமான வரி கட்டவே இல்லை அதனால்தான் வெளியே சொல்லத் தயக்கம் போலிருக்கு. அல்லது அவர் சொல்வது போல் அப்படி ஒன்றும் பெரிய பணக்காரராக இல்லாமல் இருக்கலாம்.அவரது நிறுவனங்களில் வேலை செய்த சிறு நிறுவனங்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் தானே ட்ரம்ப்.. அவருடைய நிறுவனங்களின் வெளி நாட்டுத் தொடர்பு யாருக்கும் தெரியாது. அவர் கொடுக்க வேண்டிய கடன்கள் எந்த நாட்டுக்கு என்றும் தெரியாது. அவரை நம்பி எப்படி அதிபர் பதவியை கொடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.பெரிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதன் மூலம் ட்ரம்ப், அவருக்கு வசதியை ஏற்படுத்தி கொள்கிறார். மீண்டும் ஒரு பொருளாதார தேக்க நிலைக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் ஹிலாரி எச்சரித்தார்.

ஈராக் போருக்கு ஆதரவு தெரிவித்தார் ட்ரம்ப். ஆனால் இப்போது பல்டி அடித்து பேசுகிறார் என்றும் ஹிலாரி குற்றம் சுமத்தினார். அதை மறுத்துப் பேசிய ட்ரம்ப், போருக்கு முன்னால் நான் எதிர்த்துதான் பேசினேன். போர் தொடங்கிய பிறகு அரசுக்கு ஆதரவாகப் பேசினேன் என்றார்.மேலும் ஈராக்கில் படைகளை வாபஸ் வாங்காமல் இருந்திருந்தால் ஐஎஸ்ஐஎஸ் உருவாகி இருக்காது என்றும் கூறினார்.படை வாபஸ் என்பது ஜார்ஷ் புஷ், ஈராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம். தனக்கோ, அதிபர் ஒபாமாவுக்கோ அதில் எந்த பங்கும் இல்லை என்று ஹிலாரி மறுப்பு தெரிவித்தார்.ஜப்பான், சவுதி அரேபியா நாடுகளிடம் எந்த பணமும் வாங்காமல் நமது ராணுவத்தைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கிறோம். அவர்களிடம் பணம் வாங்க வேண்டும் என்று ட்ரம்ப் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=ZEHPrYUcoi0