September 27, 2021

லிங்க்டு இன் விலை போயிடிச்சு! மைக்ரோசாப்ட் வாங்கிடுச்சு!

சமூக வலைத் தளங்களில் லிங்க்டு இன் (LinkedIn) முன்னணி வரிசைத் தளங்களில் ஒன்றாகும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் இதன் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். லிங்க்டுஇன் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது. இத்தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.

linkdin june 14

அண்மையில் வெளியான தகவல்படி, இதன் இந்திய பயனாளர் எண்ணிக்கை 2.6 கோடியாகும். இதில் 43% பேர், மொபைல் போன் வழி இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மொத்த உலக பயனாளர்களில், இந்தியாவில் 8.6% பேர் உள்ளனர். இங்கு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 20 லட்சம் பேர் பயனாளர்களாக இணைந்துள்ளனர்.

சென்ற ஏப்ரல் மாதம், இந்த தளத்தின் பயனாளர் எண்ணிக்கை பன்னாட்டளவில் 30 கோடியாக இருந்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு பயனாளர்கள் அமெரிக்காவினைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் இந்த நிறுவனத்தில் 350 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 50 பேர், பெங்களூருவில் உள்ள இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களாவர். இதன் வர்த்தகப் பிரிவு அலுவலகம் மும்பையில் இயங்குகிறது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் லிங்க்டு இன் கார்ப்பரேஷனை 26.2 பில்லியன் டாலர்கள் தொகைக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் அறிக்கை மூலம் உறுதி செய்தன.

அதாவது பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டது லிங்க்டு இன் நிறுவனத்தின் இன்றைய பங்குச் சந்தை இறுதி விலையைக் காட்டிலும் 49.5% பிரீமியம் விலையாகும்.

லிங்க்டு இன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக ஜெஃப் வெய்னர் நீடிப்பார், இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா கீழ் பணியாற்றுவார். 2016-ல் இந்த ஒப்பந்தம் முழுதும் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.