ரு ஐடி புதிதாக வரும் டீம் லீடர் முதல் நாள் இரவில் லிஃப்டில் தனியாக மாட்டிக்கொள்கிறான். அங்கு பேய் இருப்பது தெரிய வர அதனிடமிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை.

மிக மிக எளிமையான கதை, ஒரு ஐடி அலுவலக பில்டிங், நாயகன், நாயகி இதை வைத்து கொண்டு, தமிழ் சினிமா அடித்து துவைத்த பேய்க்கதையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமா பேயே வேண்டாம் என அலறும் அளவு பேய்கதைகளை சொல்லி தீர்த்து விட்டது. ஆனால் அதிலும் ஒரு வித்தியாசத்தை ஹாலிவுட் பாணி கதையாக சொல்லி அசத்தியிருக்கிறார்கள். மொத்த கதையுமே ஒரு ஐடி பில்டிங்கிற்குள் நடக்கிறது அதுவும் நாயகன் நாயகி மட்டும் தான் ஆனால் எந்த இடத்திலும் படம் போர் அடிக்கவில்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தில் அழகாக ஒரு திருப்பம் வருகிறது. அது படத்தை சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது. திரைக்கதையிலும் வசனத்திலும் அசத்தியிருக்கிறார். ஒரே இடன் குறைந்த பட்ஜெட், ஆனால் படத்தின் மேக்கிங்கில் அதை மறக்கடித்து விடுகிறார்கள்.

கவின் பயந்து போன இளைஞனின் பதட்டத்தை அழகான உடல்மொழியில் கொண்டுவந்திருக்கிறார். நடிப்பு அவருக்கு வெகு இயல்பாக வருகிறது. அவருக்கு ஹிரோ லுக் அட்டகாசமாக செட் ஆகிறது. லிஃப்டில் முதன் முதலில் பயப்பட ஆரம்பிக்கும் நேரத்திலும், உதவி கேட்டு அலறும் இடத்திலும் கவனின் நடிப்பு அட்டகாசம். கொள்ளை அழகு அம்ருதா நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பேயுடன் கேம் விளையாடி அழைக்கும் இடத்தில் அசத்துகிறார்.

யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒரு பில்டிங்குக்குள் திரும்ப திரும்ப ஓடும் காட்சிகள் வந்தாலும் வித்தியாசமான கோணங்களால் கவர்கிறார். ப்ரிட்டோ மைக்கேலின் இசை பயத்தை நெஞ்சுக்குள் ஏற்றுகிறது. பேயில்லாத காட்சிகளிலும் காட்சிக்கேற்ற இசையமைப்பில் யார் இவர் என தேடவைக்கிறார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எடிட்டிங் கச்சிதம். பேயை காமெடி பண்ணி வைத்திருக்கும் தமிழ் சினிமாவில் பேயை வைத்து ஒரு அழகான கதை சொல்லியிருக்கிறார்கள். அதற்காகவே இந்த குழுவை பாராட்டலாம். லிஃப்ட் தமிழில் ஒரு அழகான முயற்சி.

சினிமா ரசிகர்களை முழுசாக கவரும்  இந்த லிஃப்ட்.

மார்க 3.5 / 5