நாங்க ரிலீஸ் செஞ்ச மிக மிக அவசரம் – லிப்ரா ரவீந்திரன் மகிழ்ச்சி!

நாங்க ரிலீஸ் செஞ்ச மிக மிக அவசரம் – லிப்ரா ரவீந்திரன் மகிழ்ச்சி!

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பலரையும் நெகிழ வைத்தப் படம் மிக மிக அவசரம். விஐபிகளின் பாதுகாப்புக்காக சாலையில் நிற்கும் ஒரு பெண் காவலரின் இயற்கை உபாதை பிரச்சினை பற்றி குறிப்பிட்டது அந்தப் படம். இதனிடையே தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மிகமிக அவசரம் படம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளது. அந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி இருந்தாலும் படத்தை வெளியிட்டது லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர். அவர் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரவீந்திரன் சந்திரசேகர் அறிக்கை விபரம் இதோ:

“பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக வி.ஜ.பி க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்து வருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம்.

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் பதினொன்றாம் தேதி, அத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம். திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் மிக மிக அவசரம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது. இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

“முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

எந்த வலியை மிக மிக அவசரம் படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு. நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியை சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்?

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய திரு. ஜெகன்நாத் அவர்களையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன். இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா ப்ரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமை கொள்ளும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நொடியில் இருந்து, சொல்லப்போனால் வெற்றிச் செய்தி வந்த நொடியில் இருந்தே, கொரோனாவிற்கெதிரான பெரும்போரில் முன்களத்தில் நின்று சமரிட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவரது ஓயாத செயல்பாடுகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும், அதிரடி அறிவிப்புகளாலும் மாற்றுக் கட்சியினரும் வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் ஆட்சியை செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த அறிவிப்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் இனி சூடப்போகும் மகுடங்களின் உச்சியில் வைரமாய் ஜொலிக்கும். மிக மிக அவசரம் படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகவும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இந்த நேரத்தில் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாத சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன். நன்றி. ரவீந்தர் சந்திரசேகர்., லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்

error: Content is protected !!