July 28, 2021

விடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்!- வீடியோ

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்ய கோரி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளனர். தற்போது காவல் துறையின் க்யூ பிரிவு போலீசார் தங்களை பொய் வழக்கில் கைது செய்ததாக கூறும் சம்பந்தப்பட்ட வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ரூ.175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் 18 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனாராணியிடம் கடந்த வாரம் அவர்கள் வழங்கினர்.

இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் தேதி தொடங்கினர். தாங்கள் தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்போர் உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை அடுத்து நேற்று மாலை போராட்டம் நடத்திய இலங்கைத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ’எமது குடும்ப உறுப்பினர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களை கவனிப்பதற்காவது  அனுமதி வழங்கப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டவர்களின் தண்டனைக் காலம் நிறைவுற்ற நிலையிலும் நாம் விடுவிக்கப்படவில்லை. இந்த மத்திய சிறைமுகாமில் இலங்கைத் தமிழர்கள் 78 பேரும், நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த 108 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விடுதலை ஒன்றேதான் எங்கள் இலக்கு’ என குறிப்பிட்டு தற்போது வரை போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால் இப்படி போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று போலீசார் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெயில் பீஸ்!

தமிழகத்தின் பல முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாங்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.